வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
டெல்லி, பிப். 15–
இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தனியார் துறை வங்கி தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து ரிசர்வ் வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:–
‘உள்நாட்டில் நிதிச் செயல்பாடு சிறப்பாக அமைவது என்பது வங்கிகளின் தன்மையை அடிப்படையாக கொண்டது. இதனால், வங்கிகள் வழங்கப்படும் கடன்களால், வங்கியின் நிதிநிலைக்கு இடர்பாடுகள் ஏற்பட கூடாது. எனவே கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
அதனுடன் பிணையில்லாத கடன்களான தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை. இதனைத் தொடர்ந்து இணைய வழியில் நடைபெறும் பொருளாதாரக் குற்றங்கள், நிதி மோசடிகள் உள்ளிட்டவற்றைத் தடுப்பதிலும் வங்கிகள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் நலன்களைக் காப்பது வங்கிகளின் முக்கியமான பணியாகும்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.