செய்திகள்

இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம்

Makkal Kural Official

தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை, ஆக.23–-

நில ஆவணங்களில் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு, நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வசதிகளை செய்துள்ளது. அதற்கான https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளம் மூலம் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலம் விவரம், வரைப்பட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்பம் நிலை, நகர நில அளவை, புலப்பட அறிக்கை ஆகியவற்றை எளிதாக பெறலாம்.

இந்த இணையதளத்தில் கிடைக்கும் இலவச சேவைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது இங்கிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆவணங்களில் மோசடிகளும் நடைபெறுகின்றன.

எனவே தமிழக அரசு, இந்த இணையதளத்தை வணிக நோக்கத்திற்கும், மோசடிகளுக்கும் தவறாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இந்த இணையதளத்தில் இருந்து பட்டா, புலப்படங்கள் என அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயம் ஆகும். செல்போன் எண்ணை பதிவு செய்தால், அந்த எண்ணுக்கு ஓ.டி.பி. குறுஞ்செய்தி வரும். அதனை பதிவு செய்தால் தான் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகபட்சமாக 8 ஆவணங்களைதான் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த புதிய கட்டுப்பாடு நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. நேற்றும் அதில் தடங்கலின்றி ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. எனவே அதனை இன்று (23–ந் தேதி) முதல் முழு அளவில் செயல்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே இனி ஆவணங்களை செல்போன் எண் கொடுத்துதான் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஏன் செல்போன் எண் கட்டாயம் என்பதற்கு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் இருந்து கட்டுப்பாடின்றி வில்லங்க சான்றிதழ் பெறும் நிலை இருந்தது. அதில் அதிகளவு மோசடிகள் நடந்ததால், தற்போது பதிவு செய்யும் நபர்கள்தான் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் நிலை உருவாக்கப்பட்டது. அதன் மூலம் மோசடிகள் குறைந்து போனது.

அதேபோல் தற்போது நில சான்றிதழ் வழங்கும் இந்த இணையதளத்திலும் செல்போன் எண் கட்டாயம் என்று கொண்டுவரப்பட்டுள்ளது. நில ஆவணங்களின் உண்மைநிலையை கண்டறிய அதில் ‘கியூஆர் கோடு’ வசதி உள்ளது. இருப்பினும் சிலர் ஆவணங்களில் திருத்தங்களை செய்து விடுகின்றனர். அந்த திருத்தங்கள் மூலம் மோசடிகள் அரங்கேறி விடுகிறது. அந்த சமயத்தில் பதிவிறக்கம் செய்தவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது செல்போன் எண் பதிவிடுவதால், சான்றிதழ் பதிவிறக்கம் செய்தவர்களை இனி எளிதாக கண்டறிந்து விடலாம். எனவே மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *