செய்திகள்

இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நிரப்பப்படும் பணியிடங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, ஆக. 29–

போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை: இதுவா திராவிட மாடல் சமூகநீதி? தமிழ்நாட்டில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான 3 வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.

இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த அடிப்படையில் வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எந்த விவரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசில் இணைச் செயலாளர், இயக்குனர் நிலையிலான பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 45 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இட ஒதுக்கீட்டு விதிகளை புறக்கணித்து விட்டு வெளியிடப்பட்ட இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

சமூக அநீதியை முதலமைச்சர் ஆதரிக்கிறாரா

மத்திய அரசு செய்ததை விட மிக மோசமான சமூக அநீதியை, இட ஒதுக்கீடு இல்லாமல், தாங்கள் விரும்பியவர்களை தேர்வு செய்யும் வகையில் ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டது எந்த வகையில் நியாயம்? இந்த சமூக அநீதியை முதலமைச்சர் ஆதரிக்கிறாரா அல்லது தமக்கு தெரியாமல் நிகழ்ந்து விட்டது என்று தட்டிக்கழிக்கப் போகிறாரா? ஓராண்டுக்கான ஒப்பந்தப் பணி தான் என்று கூறி, இந்த சமூகநீதிப் படுகொலையை தமிழக அரசு நியாயப்படுத்த முனையக் கூடாது.

கடந்த காலங்களில் இதேபோல், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுவதுடன், அந்த நியமனங்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *