சிறுகதை

இட்லி தோசை மாவு – ராஜா செல்லமுத்து

மணி இப்போது சின்ன மினிடோர் வண்டியில் இட்லி தோசை மாவை விற்றுக் கொண்டிருந்தார். அவனின் வண்டி வருகிறதென்றால் அந்தத் தெரு முழுக்க ஆட்கள் இட்லி தோசை மாவை வாங்க காத்திருப்பார்கள்.

அரை கிலோ, ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று அத்தனையும் சுகாதாரமான முறையில் பேக் செய்து அவ்வளவு நேர்த்தியாக கொடுப்பார் மணி.

அவர் கொண்டு வரும் அரைமணி நேரத்திற்குள்ளாக அத்தனையும் விற்று தீர்ந்து விடும்.

எப்படியும் குறைந்தது ஒரு நாளைக்கு 100 கிலோ வரையில் மாவு விற்பனை செய்து விடுவார்.

சராசரியாக காலையில் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் அவரது வியாபாரம் 8 மணிக்குள் முடிந்துவிடும். அந்த இரண்டு மணி நேரத்திற்குள் 5000 ரூபாய் வரை லாபம் பார்த்து விடுவார்.

பின் குளித்து முடித்து அவருடைய அலுவலகத்துக்கு சென்று விடுவார். அடுத்த நாள் அதிகாலை இட்லி தோசை மாவு வியாபாரம் நடைபெறும்.

இப்படியாக அவரின் வியாபார உத்தியை தெரிந்துகொண்ட ரமேஷ் உன்னிப்பாக ஒருநாள் கேட்டான்.

மணி சார் காலையில் எழுந்து இரண்டு மணி நேரத்துக்குள்ள 5000 ரூபா சம்பாரிச்சுர்றீங்க. அதுக்கப்புறம் உங்களுடைய அன்றாட வேலைக்குப் போறீங்க. மறுநாள் அதை இட்லி மாவு தோசை வியாபாரம் இது எப்படி உங்களால சாத்தியம்? என்று கேட்டான் ரமேஷ்

ரமேஷ் நீங்க ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் என்ன பாக்கறீங்க ?

ஆனா, அதுக்கு முன்னாடி இருக்கிற உழைப்ப நீங்க பார்க்கல? அரிசியை ஊற வைக்கணும் .ஆட்டனும். அத புளிக்க வைக்கணும். இப்படி நிறைய வேலை இருக்கு .அதுக்கு முதல் நாள் இரவு பண்ற வேலை அதற்கு நிறைய டைம் எடுக்கும்.

ஆனா நீங்க சொல்றது சரிதான் வியாபாரம் நேரம் இரண்டு மணி நேரம்தான் . அதை முடிச்சுட்டு அடுத்த அடுத்த என்னோட வேலைக்கு போயிருவேன்.

இந்த ரெண்டு மணி நேரத்துல நான் 5000 ரூபா வரைக்கும் சம்பாதிக்கிறேன். உண்மைதான். ஆனா இந்த சம்பாத்தியம். இந்த வருமானம் ஒரே நல்ல வந்ததில்லை.

இன்னைக்கு நான் சின்ன மினிடோர் வண்டியில மாவு வச்சு என்னுடைய குரல் பதிவு ஸ்பீக்கரில் கேட்டவுடனே இன்னிக்கு வர்றாங்க. இது இன்னைக்கு நேத்து ஒரு ராத்திரி நடந்த விஷயம் அல்ல.

ஒரு வருஷமா நான் போட்ட விதை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள்ல இந்த மாவ வச்சுக்கிட்டு இட்லி தோசை மாவு.. இட்லி தோசை மாவுன்னு விப்பேன். ஆனா ஒரு ஆள் என்ன என்னன்னு கேக்க மாட்டாங்க. யாரு வாங்கினதும் இல்லை. பொட்டலம் கட்டிட்டு போன மாவு அப்படியே தான் திரும்பி வருமே ஒழிய ஒரு ஆளும் என்கிட்ட என்னன்னு கேக்க மாட்டாங்க. ஒரு பைசாவுக்கு கூட விக்கல.

யாரு வாங்க மாட்டேங்குறாங்களே வியாபாரம் கிடைக்கிலைன்னு அப்படின்னு ஒருநாளும் நின்னதில்லை. தினந்தோறும் தெருத்தெருவா போனேன். என்னுடைய குரல் அவங்களுக்கு பதிவு ஆயிடுச்சு .யாரும் வாங்கல அப்படிங்கிறதுகாக நான் எந்த தெருவையும் விடல.

அப்படி தினமும் நான் போகும்போது ஒரு சிலர் வாங்க ஆரம்பிச்சாங்க . என்னோட மாவு பக்குவம், சுவை இவை எல்லாம் பார்த்து ஒவ்வொருத்தரா வாங்க ஆரம்பிச்சாங்க.

இன்னைக்கு இந்தத் தெரு அடுத்த தெரு அப்படின்னு ஒரு நாளைக்கு 100 கிலோவுக்கு மேல விக்கிறேன். என்ன என்னோட சலிக்காத உழைப்பு தான் காரணம்.

ஒரு நாள்ல, ரெண்டு நாள்ல யாரும் இந்த மாவு வாங்கல. இந்த வேலை வேண்டாம்னு நான் வேற வேலைக்கு போய் இருந்தேன்னா இவ்வளவு தூரத்துக்கு நான் சாதிக்க முடியாது .

அதனாலதான் இன்னிக்கு இவ்வளவு சம்பாதிக்கிறேன். அதுக்கு பின்னாடி நிறைய உழைப்பு இருக்கு என்று சொன்னார் மணி .

அவரின் வார்த்தையைக் கேட்ட ரமேஷ் ரொம்பவே நம்பிக்கையானான்.

ஒரு மனிதனின் வெற்றி என்பது ஒரு இரவில் வந்து விடுவதில்லை. அதற்கு முன்னால் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது. மணியம் அதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார். என்று நினைத்தான் ரமேஷ்.

மறுநாள் காலை வழக்கம் போல இட்லி தோசை மாவு ….இட்லி தோசை மாவு…. என்ற மணியின் குரல் பதிவு அந்த ஏரியா முழுக்க கேட்டுக்கொண்டிருந்தது.

அவரின் வியாபாரம், அவரின் பணம் ,அவரின் பழக்க வழக்கம் இவைகளெல்லாம் விடாமுயற்சியின் வெளிப்பாடு என்பதை அறிந்தான் ரமேஷ்.

நாமும் அது போல் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் வீட்டைவிட்டு வெளியேறினான் ரமேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *