அழகப்பன் எப்போதும் சுறுசுறுப்பாகவே ஊரில் வலம் வருபவன். பல நல்ல விஷயங்கள் பேசினாலும் பலருக்கு உதவியாக இருந்தாலும் அவர் பழைய நினைவுகள் மூழ்கி பேசும் பழங்கதைகளைக் கேட்பதற்கு மட்டும் ஆட்கள் ஒதுங்கி விடுவர்.
இவருக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண் வாரிசுகள். இருவரையும் நன்கு படிக்க வைத்து நல்ல வேளையில் அவர்கள் அமர்ந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்கள் பணி நிமித்தம் காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடி புகுந்தார்கள். வீட்டிற்கு வந்த மருமகள் மற்றும் மாப்பிள்ளை மாமனாருடன் பேசுவதற்கே தயங்கினார்கள். ஏனெனில் இவர் எந்த ஒரு செய்கைக்கும் பழைய உதாரணங்களையேக் கூறி விளக்க ஆரம்பித்து விடுவது தான். இந்தக் கால நிலைமையை அவர் யோசிக்காதவரும் அல்லர். பழக்க தோசம் அவர் சொல்லி விடும் சில வார்த்தைகளால் பையன் மற்றும் பெண்ணிடம் திட்டு வாங்கிக் கொள்வார். இதனால் இவர் அவர்கள் வீட்டிற்குச் செல்வதையே தவிர்த்தார். அவர்களும் இவர் வந்தால் என்ன சொல்வாரோ என பயந்து நடுங்குவர்.
இவருக்கு ஊரில் பழங்கதை அழகப்பன் என பெயர் சூட்டி மறைமுகமாக அழைத்தனர். கடிகாரத்திற்கு நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும். நல்ல நேரம் கெட்ட நேரமென காட்டத் தெரியாது. அதே போன்று அழகப்பன் நல்ல பல செய்திகளைக் கூறினாலும் அவைகளை கேட்கக் கூடியவர்கள் யார், கேலி செய்பவர் யாரென அவர் பிரித்துப் பார்க்க மாட்டார். அது தான் அவருக்கு அவப் பெயர் பெற்றுத் தந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள மாட்டார். எந்த வித கள்ளம் கபடமின்றி இவர் பேசினாலும் சிலர் இவர் பேசுவதை மாற்றிச் சொல்லி சில சமயம் பிரச்னையை உண்டாக்கி விடுவார்கள். யதார்த்தமாக அழகப்பன் கூறினாலும் அதில் உண்மை நிலையிருந்தாலும் அவரது பேச்சைக் கேட்பவர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தனர்.
இவருக்கு தற்போது நண்பர்களாக வலம் வருபவர்கள் தியாகு, கணபதி மற்றும் சம்பந்தம் தான். தினமும் மாலை வேளைகளில் இவர்கள் நால்வரும் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவார்கள். அப்போது பல தரப்பட்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். இவர்கள் நடைப்பயணம் முடிந்து திரும்பும் போது பேரிச்சம்பழம், பொரிகடலை, வேர்க்கடலை, சுண்டல் போன்ற ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டு வரும் வழியில் உள்ள ஓட்டல் சுகாதாரமான ஒரு ஓட்டலில் காபி அல்லது தேநீர் அருந்தி விட்டு வீடு திரும்புவார்கள்.
அன்று காலையில் அழகப்பன் தன் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று நம் வீட்டிலேயே அமர்ந்து பேசுவோம். வெளியே செல்ல வேண்டாமென சொன்னார். மிகுந்த யோசனையுடன் அழகப்பன் வீட்டிற்கு வந்தவர்களை புன்னகையுடன் வரவேற்ற அழகப்பன் அவர்களுக்கு போண்டா, காபி தந்ததும் தியாகு என்னப்பா என்ன விசேஷம் என்றார். ஒன்றுமில்லை சில விஷயங்களை உங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று தான் என்றார்.
நான் பழைய விஷயங்களையே பேசுவதாக எனக்கு பழங்கதை அழகப்பன் என்று பெபர் சூட்டப்பட்டதை அறிவேன். எனது தாத்தாவிடம் எங்கள் அப்பா ஏதாவது கோரிக்கை வைத்தால் மிகுந்த யோசனையுடன் தாழ்ந்த குரலில் தனது விண்ணப்பத்தைத் தெரிவித்ததும் தாத்தா அதை முழுமையாகக் கேட்டு விட்டு சரி சொல்லுகிறேன் என்றால் அது பரிசீலனையில் உள்ளது என்றும் வெறும் தலையை மட்டும் ஆட்டினால் பிறகு பார்க்கலாம் என்றும் அர்த்தம் கொள்வார்கள். நான் எனது அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் அவர் ஏற்கனவே நீ செய்தது என்னாச்சு, பணம் மட்டுந்தான் செலவாகிறது என்று சொல்லி தள்ளிப் போடுவது போன்று நிராகரித்து விடுவார். இப்போது என் மகன் முடிவெடுத்து விட்டு அதை நடைமுறை படுத்தும் சமயம் ஒப்புக்காக சொல்லுகிறான். நாம் என்ன அவர்கள் செயலுக்கு முட்டுக் கட்டையாகவா நிற்கப் போகிறோம் என வருத்தத்துடன் கூறினார். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற வார்த்தை தான் தற்போதுள்ள இளைஞர்களின் தாரக மந்திரமாக உள்ளது என்றார்.
தன் பிள்ளைகள் மேற்படிப்பை உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ படிக்க எந்த ஒரு பெற்றோரும் தடையாக நிற்பதில்லை. ஆனால் பிள்ளைகளோ சில சமயங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு தான் படிக்கும் படிப்பிற்குத் தகுந்த வேலை உள் நாட்டில் அல்லது வெளி நாட்டில் எப்படியிருக்கும் வரும் நாட்களில் என்பதை சரியாக ஆராய்வதில்லை. படிப்பிற்குப் பிறகு அவதிப் படுவார்கள் எண்ணிக்கை ஒரு பக்கம் கூடிக் கொண்டே போகிறது என்பதே உண்மை. அன்று பிள்ளைகள் அப்பாவிடம் பேச அச்சம் கொண்டது மாறி இப்போது அப்பாக்கள் பிள்ளைகளிடம் பேச தயங்குகிறார்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கையே அதிகம் பல வருடங்களுக்கு முன்னால். பெண்ணைத் திருமண மேடையில் தான் பார்த்து தாலி கட்டியவர்கள் இருந்திருக்கிறார்கள். அன்று விவாகரத்து என்பது மிகவும் அபூர்வம். இன்று என்னத்தச் சொல்றது என்றார். அன்று மணவிழாவில் முகூர்த்த நேரத்தில் மண்டபத்தில் கூட்டம் அலைமோதும். இன்று மணநாளுக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்வில் வந்து மேடையில் தம்பதிகளைப் பார்த்து கை குலுக்கி விட்டு கவர் அல்லது பரிசுப் பொருட்கள் தந்து விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. அன்று பிள்ளைகள் வீடு வாங்க வேண்டுமானால் பெரியவர்கள் தனது ஆலாசனைகளை வழங்கி நல்ல மனையை தேர்ந்தெடுத்து கட்டிடம் முடிக்கும் வரை துணை நின்று உதவுவர். இன்றோ பையன் முடிவு செய்து விட்டு ஒரு ஒப்புக்காக கூறுகின்றான். பணம் சேர்த்து தனது பட்ஜெட்டில் வீடு வாங்கியது போக இன்று கடன் வாங்கி வீடு வாங்குகின்றனர். கேட்டால் வருமான வரி விலக்கிற்காக கடன் வாங்கியுள்ளோம் என்று பெருமிதமாக கூறுகின்றனர். குழந்தைகளை சக்திக்கு மீறி பல வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அந்தப் பிள்ளைகளின் கிரகிக்கும் சக்தி என்ன என்பதை அறிய முற்படாமல் பின் வருந்துவதோடு மட்டுமல்லாமல் பணத்தையும் இழக்கின்றனர். அன்று கடை கடையாக ஏறி நல்ல பொருட்கள் வாங்கியது போக இன்று இணைய தளத்தில் ஆர்டர் செய்து அவர்கள் தரும் தள்ளுபடிக்கு மயங்கி நிறையப் பொருட்கள் வாங்குகின்றனர். இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம். நாமெல்லாம் சேர்த்தது நமது வாரிசுகளுக்கே என்பதை மறந்து விடுகின்றனர். நாம் மிகவும் கஷ்டப்பட்டதால் வாழ்வில் முன்னேறுவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்து நாம் கூறும் அறிவுரைகள் தற்போதுள்ள இளைஞர்கள் ஏற்பதில்லை. ஏதாவது துன்பம் வந்தால் அதை எதிர் கொள்ளும் மனப் பக்குவமின்றி ஏதோ ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்கின்றனர். நமக்கும் நமது வாரிசுகளுக்கும் இடையே இடைவெளி கூடிக் கொண்டே தான் போகிறது. நான் எனது கடமையை இன்னும் சரிவர முடிக்கவிைலை என்று தான் தோன்றுகிறது என்றதும் அப்போது உள்ளே நுழைந்த மகன், மருமகள், மாப்பிள்ளை மற்றும் மகள் அப்பா எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதுகாறும் பேசியதைக் கேட்டு பொக்கிஷத்தை இழந்து விடக்கூடாதென முடிவுக்கு வந்தோம் என்றதும் அழகப்பன் நண்பர்கள் இனிமேல் இந்த வீட்டில் இடைவெளி என்பதே இருக்காது என்றதும் புன்னகையை மறந்திருந்த இல்லம் புன்னகையில் பூத்துக் குலுங்கியது.