சிறுகதை

இடைநிறுத்தம்…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

பனி கொட்டும் அந்த இரவு நேரத்தில், ஒரு நகரப் பேருந்து தார்ச்சாலையில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் பனித்துளிகள் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. நாகநாதன் டிரைவர். வண்டியை ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார். யார் எந்த இடத்தில் பேருந்தை நிறுத்தினாலும் உடனே நிறுத்தி விடுவார். இதனால் பயணிகள் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. நாகநாதனை நேரடியாகத் தெரிகிறதோ இல்லையோ? அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் மனதில் வேர் ஊன்றியிருந்தது. இப்படி ஒரு டிரைவரை நான் பாத்ததே இல்லைங்க என்ற அளவிற்கு பேர் வாங்கினார் நாகநாதன். ஆனால் டிபார்ட்மெண்டில் அவருக்கு கெட்ட பெயர் இருந்தது. கண்ட இடத்தில் வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றுகிறார். இதனால் போக்குவரத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்று அவருக்கு சில நேரங்களில் எச்சரிக்கை விடுத்தார்கள் உயர் அதிகாரிகள்.

” சார் மக்கள் ரொம்ப பாவம். மழையில வராங்க. ராத்திரி நேரம் லேட்டா வர்றாங்க. அவங்கள ஸ்லோ பண்ணி ஏத்திட்டு போறதில நமக்கு என்ன நட்டம் வரப்போகுது சார். நாம மக்களுக்காகத் தான் பணி செய்றோம் ” என்று நாகநாதன் வாதிட்டாலும்

“ஏங்க நீங்க ரொம்ப விதண்டவாதம் பேசுறீங்க. நீங்க என்ன அரசியல்வாதியா? எல்லாருக்கும் நல்லது செய்றதுக்கு அரசு ஊழியர். உங்க கடமைய சரியா செய்யணும். கண்ட கண்ட இடத்துல இறங்குவாங்க கண்ட இடத்துல ஏறுவாங்க. அப்படிங்கிறதுக்காக தான் கதவு போட்ட பஸ்ஸ கவர்மென்ட் நமக்கு கொடுத்திருக்காங்க. அத விட்டுட்டு நீங்க கண்ட இடத்துல கதவ திறந்து ஆளுங்கள ஏத்துறீங்க. இது தப்பு இல்லையா ? என்று உயர் அதிகாரிகள் எகிற எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் நாகநாதன்.

“சரி இனிமேலாவது பாத்து ஓட்டுங்க” என்று எச்சரிக்கை கொடுத்து அனுப்பினார்கள். மறுபடியும் பேருந்தில் ஏறினார் நாகநாதன். அவரால் இடைமறிக்கும் பயணிகளுக்கு பஸ்ஸை நிறுத்தாமல் செல்வதற்கு அவருக்கு மனம் ஒப்பவில்லை. எங்கெங்கு யார் யார் கை காட்டுகிறார்களோ? அங்கெல்லாம் பேருந்தை நிறுத்தி ஆட்களை ஏற்றிச் சென்றார்.

இந்த விஷயம் மறுபடியும் போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

” சரி நாகநாதன் நீங்க இந்த வேலைக்குச் சரிப்பட்டு வரமாட்டீங்க போல உங்களுக்கு ஒரு மாதம் சஸ்பெண்ட் நீங்க வீட்டுக்கு போலாம். நீங்க செய்றது ரைட்டா தப்பான்னு ஒனந்துட்டுவாங்க. அதுக்கு அப்புறம் நீங்க வேலையில ஜாய்ன் பண்ணிக்கலாம்”

என்று உயர் அதிகாரிகள் நாகநாதனுக்கு சஸ்பெண்ட் கொடுத்து அனுப்பினார்கள். அந்த மெமோவை கூட சிரித்துக் கொண்டே தான் வாங்கினார் நாகநாதன்.

மறுநாள், நடத்துனர் உடை அணியாமல் வீதியில் சென்று கொண்டிருந்த நாகநாதனைப் பார்த்த ஒரு பயணி

“சார் உங்கள மாதிரி ஒரு நல்ல கண்டக்டர நான் பாத்ததே இல்ல. ரோட்ல யாரு கை நீட்டினாலும் நீங்க அவங்களுக்கு மரியாதை குடுத்து அந்தப் பயணிகள ஏத்திட்டு போறீங்க.உங்கள மாதிரி ஒரு மனித நேயம் உள்ள கண்டக்டர் இங்க யாரும் இல்ல சார்” என்று அந்தப் பயணி சொல்ல

நாகநாதன் சிரித்துக் கொண்டார்

இன்னைக்கு டூட்டி லீவா? என்று கேட்க ,அதற்கும் புன்னகையை மட்டுமே அவருக்குப் பதிலாக தந்தார் நாகநாதன்.

” ஐயா, நீங்க கேக்குறது சரிதான். எந்தப் பயணிகள மக்கள இவர் நேசிச்சாரோ? அதே விஷயம் தான் அவருக்கு இப்போ பாதகமாக அமச்சிருக்கு .ஒரு மாசம் அவர சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க”

என்று நான்அவர் சொன்ன போது

” எதுக்காக?” என்று அந்த வழிப்போக்குப் பயணி கேட்க,

“கண்ட இடத்துல பஸ்ஸ நிறுத்தி ஆட்கள ஏத்துறாருன்னு தான் ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க “

என்று அவர் சொல்ல “இது என்னங்க பெரிய கொடுமையா இருக்கு .மக்களுக்கு சேவை செய்றதுக்கு தானே பஸ். அதைத்தானே அவர் செஞ்சாரு. அதுக்கு என்னத்துக்கு அவர சஸ்பெண்ட் பண்ணனும். பாராட்டத் தானே செய்யணும்” என்று அவர் கேட்க அதைக் கேட்டு இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

மறுநாள் எல்லா பேருந்துகளும் யார் யார் எங்கே கை நீட்டுகிறார்களோ, அங்கே எல்லாம் பஸ் நின்று சென்றது .உடனடியாக நாகநாதனமும் பணியில் சேர்க்கப்பட்டார்.

” இது எப்படி நடந்தது?” என்று நாகநாதனுக்கு தெரியவில்லை.

” நாம ஒன்னு நினைச்சா கடவுள் ஒன்ன நினைக்கிறார் .நாகநாதன வேலைய விட்டு தூக்கலாம்னு நினைச்சா, மறுபடியும் அவரச் சேக்கச் சொல்லி கவர்மெண்ட்ல இருந்து ஆர்டர் வந்திருக்கு “

புலம்பினர், அதிகாரிகள்.

வழக்கம் போல், நாகநாதன் யார் யார் கை நீட்டுகிறார்களோ அங்கெல்லாம் பேருந்தை நிறுத்தி ஆட்களை ஏற்றினார்.

“இது எப்படிங்க” என்று சிலர் கேட்க, “மக்கள்ட்ட இருந்து பெரிய பிரஷர் ங்க. நாகநாதன் நல்லவர்னு. வேற வழி இல்ல. ” என்று உயரதிகாரிகள் பதில் சொன்னார்கள்.

” நாகநாதன்,இப்பயாவது சொல்லுங்க எதுக்காக எல்லா இடங்கள்லயும் பஸ்ஸ நிப்பாட்டி ஆளுகளை ஏத்திட்டு போறீங்க” என்று கேட்டபோது,கண் கலங்கினார் நாகநாதன்.

“சின்ன வயசுல எங்க ஊர்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் ரொம்ப தூரமா இருக்கு . ஒருமுறை எங்க அம்மா உடம்பு சரியில்லாம அவங்கள பஸ் ஸ்டாண்ட்டுக்கு கூட்டிட்டுப் போனேன். அப்போ ஒரு பஸ் ரோட்டுல வந்தது. நான் கை நீட்டினேன். அந்த பஸ் நிக்கல. பஸ் ஸ்டாண்டுக்கு எங்க அம்மாவ கூப்பிட்டு போறதுக்குள்ள அவங்க மயக்கம் போட்டுட்டாங்க. அப்புறம் ஆசுபத்திரிக்கு கூப்பிட்டுப் போனேன். பத்து நிமிவுக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா அம்மாவ காப்பாத்தியிருக்கலாம்னு சொன்னாங்க. அன்னைக்கு இருந்து எல்லாருக்கும் நான் உதவி செஞ்சிட்டு தான் இருக்கேன். வழி மறிக்கிற பயணிக்கு என்ன பிரச்சினைன்னு யாருக்கு தெரியும். என் நெலமை யாருக்கும் வந்திரக் கூடாது. அதுக்காக தான் நான் யாரையும் நிராகரிக்கிறதில்ல”

என்று கண்ணீர் விட்டார், நாகநாதன். அவரைப் பாராட்ட மட்டுமில்லை. தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

நடந்து வந்த கொண்டிருந்த ஒரு பெண், தார்ச்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தைப் பார்த்துக் கை நீட்டினார். பேருந்து மெல்ல மெல்ல வேகம் குறைத்து அந்தப் பெண்ணிடம் வந்து நின்றது.

#சிறுகதை

Loading

One Reply to “இடைநிறுத்தம்…! – ராஜா செல்லமுத்து

  1. நாகமுத்து மனித நேயம் உள்ளவர், ஆனால் இந்த காலத்துக்கு இதெல்லாம் எப்படி சரிப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *