செய்திகள்

இடைக்கால போர் நிறுத்தம் தொடரும்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

காசா, நவ.30–

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இருதரப்பும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, “பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்த நாடுகளின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின் படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடைய தெளிவான விபரங்கள் எதுவும் குறிப்பிடாமல், ஏழாவது நாளைக்கு போர் நிறுத்தம் நீட்டிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 1,200 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை சிறைபிடித்தனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13,300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கத்தார் நாட்டின் சமரச முயற்சியாலும், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாகவும் இருதரப்புக்கு இடையில் கடந்த 24ம் தேதி தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் போர் நிறுத்தத்தின் ஆறாவது நாளான நேற்று 10 இஸ்ரேலியர்கள் உட்பட 16 பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பு விடுவித்தது. மீதமுள்ள ஆறுபேரில் டச்சு நாட்டைச் சேர்ந்த மைனர் ஒருவர். மூன்று ஜெர்மானியர்கள், ஒருவர் அமெரிக்கர். இதற்கிடையில், இரண்டு ரஷ்யர்கள், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் போர் நிறுத்த ஒப்பந்த கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நவம்பர் 24-ம் தேதியில் இருந்து, 97 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்னும் 145 பிணைக் கைதிகள் காசா பகுதிக்குள் இருப்பதாக இஸ்ரேஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *