செய்திகள்

இடது – வலது தாடையில் எலும்பு முறிந்தது; வாயில் உட்புறம் 30 தையல்: துணிச்சலாய் நாட்டியமாடி காவ்யா முரளீதரன் ‘அசுர’ சாதனை

Spread the love

* சாலை விபத்தில் சிக்கி காலிழந்த ‘நாட்டிய மயூரி’ சுதா சந்திரன் ஜெய்ப்பூர் செயற்கைக் காலைப் பொருத்தி, நாட்டியமாடி தனிப்பெரும் சாதனை படைத்து வெற்றி வலம் வருவது நினைவிருக்கலாம். சுதா வழியில் இதோ காவியா முரளி. இன்னொரு சாதனையாளர்.

* வாயைத் திறக்க முடியாத நிலையிலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களிடம் வணக்கம் நன்றி என்று சிரமப்பட்டு சொல்லி, நமஸ்கரித்த போது அரங்கம் நெகிழ்ந்து போனது.

சென்னை, ஜன.12

நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் சம்பவம் அது. நடன ஒத்திகையின்போது மொசைக் தரையில் ‘தடாலென்று’ சறுக்கி விழுந்தார் இளம் நடனக்கலைஞர் காவியா முரளிதரன் (வயது 23). அதில் இடது பக்கம் வலது பக்கம் தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு ஆபரேஷன் நடந்தது. முகவாய்க் கட்டையில் பலத்த அடிபட்டது. வாயில் உட்புறம் 30 தையல் போடப்பட்டது. இருப்பினும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டிய நிகழ்ச்சியை எந்தவிதத்திலும் ரத்து செய்யக்கூடாது, ஆடியே தீருவேன் என்று ஒரு வைராக்கியத்துடன் மேடை ஏறி ஆடினார் காவியா. துணிச்சலில் ஆடி, அசுர சாதனை படைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் சங்கீத நாடக அகாடமி விருதுபெற்ற மன்னார்குடி ஈஸ்வரன், மிருதங்க வாத்திய மணி டாக்டர் பிரபஞ்சம் ரவீந்திரன் உள்ளிட்ட பார்வையாளர்கள் காவியாவின் அதிரடி நாட்டியத்தை பார்த்து வியந்தே போனார்கள்.

‘ஆடலரசன்’ மதுரை ஆர் முரளிதரன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கும் சுமேதா கலை நிறுவனத்தின் சார்பில் நான்கு வித்தியாசமான தாளங்களில் இந்த நாட்டிய விருந்து நிகழ்ச்சி சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் நாள் ருஷிகா இளங்குமரனும், ஸ்வேதா பரராஜசிங்கமும் ஆடினார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காவியா முரளிதரன், சஞ்சிதா கண்ணன் ஆடினார்கள்.

8 வயதில் அரங்கேற்றம்

மதுரை முரளீதரன் சித்ரா தம்பதியினரின் மகள் காவியா முரளிதரன் . சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஎஸ்காம் பட்டதாரி.சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பரதநாட்டியத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

எட்டு வயதில் அரங்கேற்றம் கண்டார். தன்னுடைய பெற்றோர்களோடு அமெரிக்கா முழுவதிலும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, லண்டன், சிங்கப்பூர், துபாய் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பெற்றோர்களோடு இணைந்து நாட்டியம் ஆடி இருக்கிறார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற எச்.சி.எல். நாட்டியத் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ‘சிறந்த நாட்டிய கலைஞர் விருது’ பெற்றிருக்கிறார். மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் உதவித்தொகை பெற்று இருக்கிறார். யுவ கலா பாரதி, யுவ கலா விபாஞ்சி, நிருத்ய லய கிஷோர் சுந்தரம், சிலம்புச் செல்வி ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

சுமேதா நாட்டிய நிகழ்ச்சிக்காக தன்னுடைய வீட்டில் நடன ஒத்திகையில் காவியா ஈடுபட்டு இருந்தார். அப்போது ஆடிக் கொண்டிருக்கும்போது தரையில் கால் வழுக்கி தடாலென்று கீழே விழுந்தார். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தாடையில் இடப்பக்கமும் வலப்பக்கமும் எலும்பு உடைந்தது. வலியால் துடித்த அவரை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிடி ஸ்கேன் சோதனையில், முகத்தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். வாயில் உட்புறம் முப்பது தையல் போடப்பட்டது.

டாக்டர்கள் சொல்லியதை ஏற்க மறுத்தார்

பத்துநாள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. படுக்கையில் இருந்தபடியே பயிற்சியை மேற்கொண்டார். எந்தக் காரணத்தைக் கொண்டும் நிகழ்ச்சியை ரத்து செய்து விடக்கூடாது என்று தந்தையிடம் கண்டிப்போடு கூறினார். பெற்றோர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். பயந்தனர். மேற்கொண்டு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று தவித்துப் போனவர்கள் மகளை சமாதானம் செய்து பார்த்தார்கள். ஒன்றும் முடியவில்லை. வேறு வழியின்றி மகளின் போக்குக்கு விட்டுவிட்டு அவளை மேடை ஏற்றினார்கள்.

மிஸ்ர ஜாதி துருவ தாளத்தில் மார்க்கம் நிகழ்ச்சியில் காவிய லக்ஷ்மி வெற்றிகரமாக ஆடி முடித்தார். சுமார் 90 நிமிடங்கள் கொஞ்சமும் சளைக்காமல் அவர் ஆடினார். அதைப் பார்த்து சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் சிலிர்த்துப் போனார்கள்.

என்னமாய் ஒரு பக்தி? லேசில் வராது

* மேடையேறி வாழ்த்திய டாக்டர் பத்மா சுப்ரமணியம் காவியாவை பற்றி வார்த்தை வெளிவராமல் சிறுது நேரம் ஆனந்தக் கண்ணீரில் மௌனமாக நின்றார். இவளின் சாதனை மிகப்பெரிய சாதனை. மாதா, பிதா, குரு தெய்வத்தின் அருள் இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் எப்படி, இப்படி ஆட வரும்? நாட்டியத்தில் பக்தி அபாரம் என்று வியந்து அவளை உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தார்.

* மன்னார்குடி ஈஸ்வரன் பேசுகையில், ‘‘இப்படியும் ஒரு பெண்ணா, இப்படியும் ஒரு வைராக்கியமா, இப்படியும் ஒரு சாதனையா…’ என்று கேள்விமேல் கேட்டு அதிசயித்த அவர் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. தெய்வம் துணை நின்றிருக்கிறது. காவியாவின் சாதனைக்கு மனம் திறந்த பாராட்டுக்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

* அடுத்து பேசிய டாக்டர் பிரபஞ்சம் ரவீந்திரன், ‘ஆடல் வல்லான் அதாவது சிதம்பரம் நடராஜன் தான் அவள் உடம்பில் நுழைந்து அவளை ஆட்டுவித்தான் என்றே நான் உணர்கிறேன். இது சாமானிய காரியம் அல்ல. தெய்வச்செயல். ஒன்பது நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கியவள் ஆட முடியுமா என்ற கேள்வி குறி எழுந்த நேரத்தில், இன்றைக்கு வெற்றிகரமாக ஆடி ஆச்சரியக்குறி ஆகியிருக்கிறார் காவியா. அவளின் பயணங்கள் முடிவதில்லை என்று நெகிழ்ந்து போய் கூறினார்.

மனமஸ்வினிக்கு 10 நிமிடம்

காவ்யா, தொடர்ந்து ஆடுவதில் சிரமம் இருக்கும் என்று உணர்ந்த நிலையில் அவர் பத்து நிமிடம் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக மனஸ்வினி ஆடினார் . இவர் மதுரை முரளிதரனின் சகோதரி மணிமேகலை சர்மாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பிரபல நாட்டிய கலைஞர்கள் ராதிகா சுர்ஜித், தாட்சாயினி, உமா முரளி, லதாரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்பார்கள். தாடை எலும்பு முறிந்து தையல் போடப்பட்ட நிலையில் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ஆடிய காவியாவை அவர்கள் தனித்தனியாக பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *