செய்திகள்

இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய்: பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

லண்டன், பிப். 06–

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து, பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், `விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி தொடர்பாக மன்னர் சார்லஸுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செயல்முறையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சை இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அதனால், பொதுவெளியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அதேசமயம், இந்தக் காலகட்டத்தில் அரசு வணிகம் உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளையும் அவர் மேற்கொள்வர். தன்னுடைய சிகிச்சை பற்றி மன்னர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். விரைவில் முழுமையாக பொதுப்பணிக்குத் திரும்புவார். உலகிலுள்ள அனைவருக்கும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவர் அறிவித்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், என்ன வகையான புற்றுநோய் பாதிப்பு என்று தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த மன்னர் யார்?

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணியும், தன்னுடைய தாயுமான எலிசபெத் உயிரிழந்த பிறகு மன்னராகப் பதவியேற்று ஒன்றரை ஆண்டு ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மன்னர் பதவியிலிருந்து ஒருவேளை அவர் விலகும் பட்சத்தில் அடுத்த மன்னர் யார் என்ற விவகாரம் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், நோஸ்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்திரதாம் என்பவர் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவை என்று கணித்து எழுதி வைத்த புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சம்பவம், இங்கிலாந்தின் தற்போதைய மன்னர் சார்லஸைக் குறிப்பதாக ஜோதிடர்கள் சிலர் கூறுவது பேசுபொருளாகியிருக்கிறது.

அதாவது நோஸ்ராடாமஸின் புத்தகத்தில், `தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில், தீவுகளின் மன்னர் என்பது சார்லஸைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்பான “லெஸ் புரோபெடீஸ்” மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்குகிறார். இப்படைப்பு 1555 -ம் ஆண்டில் முதலில் அச்சடிக்கப்பட்டது என்கிறார்கள். இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ், இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *