செய்திகள்

இங்கிலாந்து – இந்தியா இடையே ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தம்

காணொலி காட்சி வழியாக போரிஸ் ஜான்சனுடன் மோடி பேச்சு

புதுடெல்லி, மே.5-

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது இரு தரப்பில் ரூ.10 ஆயிரத்து 200 கோடி வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளவிருந்த இந்திய சுற்றுப்பயணம் இருமுறை ரத்தானது.

கடைசியாக கடந்த மாதம் 25-ந்தேதி அவர் வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டபோது, அவரும், இந்திய பிரதமர் மோடியும் காணொலி காட்சி வழியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகின.

அதன்படியே பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் நேற்று காணொலி காட்சி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, இருதரப்பு ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் பேசினார்கள்.

இங்கிலாந்து, இந்திய உறவில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளனர். இரு தரப்பு உறவுக்கு 2030-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு கால திட்டம் இரு தலைவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது இரு தரப்புக்கும் இடையே சுகாதாரம், பருவநிலை, வர்த்தகம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவுக்கான ஒரு புதிய கட்டமைப்பை வழங்கும். இந்தியாவுடன் ரூ.10,200 கோடியில் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, பிரிட்டனில் புதிதாக 6,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியா–பிரிட்டன் இடையேயான வர்த்தக மதிப்பு தற்போது ஆண்டுக்கு ரூ.2.35 லட்சம் கோடியாக உள்ளது. இதை, வரும் 2030ம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது. இதுதவிர விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும் பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் மருத்துவம், உயிரிதொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 20 இந்திய நிறுவனங்கள் ரூ.5,453 கோடி முதலீடு செய்யவுள்ளன. அதில், சீரம் நிறுவனம் ரூ.2,455 கோடி முதலீடு செய்கிறது. அந்த நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பிரிட்டனில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யவுள்ளது. பிரிட்டனில் விற்பனை அலுவலகத்தையும் அந்த நிறுவனம் திறக்கவுள்ளது. இதுதவிர, விப்ரோ, கியூரிச் கிரியேஷன்ஸ், மாஸ்டெக், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பிரிட்டனில் முதலீடு செய்யவுள்ளன.

இதேபோன்று பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், இந்தியாவுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அதன்படி, இந்தியாவுக்கு ரூ.4,563 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்ப அமைப்பை பிரிட்டன் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவுள்ளன. அந்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ.2,046 கோடியாகும். இந்த ஒப்பந்ததால், இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எளிதாக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் காணொலி காட்சி வழியாக நடத்திய உச்சி மாநாடு இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை திறந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்தும் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது மோடி, பொருளாதார குற்றவாளிகள் இந்தியாவில் விசாரணைக்காக விரைவில் அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *