செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்தியா

லண்டன், செப். 5–

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் மூன்றவாது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் நிதானமாக ஆடி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்து இந்தியாவை விட 99 ரன்கள் அதிகமாக அடித்தது. அதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானஆட்டத்தை வெளிளப்படுத்தினர். இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட சமாளித்த அவர்கள் ரன்களை குவிக்கத் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 83 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 46 ரன்களில் (101 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்த புஜாரா தனது வழக்கமான தடுப்பாட்டத்தை விட்டு விட்டு ரன் அடிக்கும் முயற்சியில் இறங்கினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா மொயீன் அலியின் பந்து வீச்சில் பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். வெளிநாட்டு மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். முன்னதாக 80 ரன்னில் இருந்த போது டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களையும் கடந்தார்.

புதிய பந்தில் விக்கெட்

80 ஓவருக்கு பிறகு எடுக்கப்பட்ட புதிய பந்தில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது. ஸ்கோர் 236 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா ராபின்சனின் பந்து வீச்சில் 127 ரன்களில் (256 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அதே ஓவரில் புஜாராவும் (61 ரன், 127 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 92 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கேப்டன் விராட் கோலி (22 ரன்), ரவீந்திர ஜடேஜா (9 ரன்) களத்தில் உள்ளனர். இந்திய அணி வீரர்களின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

4-வது நாளான இன்றும் இந்திய அணி நிலைத்து நின்று ஆடி அதிகமான ரன்கள் சேர்த்தால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *