விசாகப்பட்டிணம், பிப். 1–
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கிஸில் 246 ரன்னும், இந்திய அணி 436 ரன்னும் எடுத்தன. பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 420 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் மற்றும் ஜடேஜாவிற்கு காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு
பின்னடைவு
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது அவருக்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் 2-வது இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசினார்.காயம் குணமடைந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், 2-வது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.32 வயதான அனுபவ வீரரான ஜேக் லீச் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணி கடைசியாக 2021 இல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தனர். இருப்பினும், அங்கு நடந்த 2வது போட்டியில் மீண்டு அதிரடி கம்பேக் கொடுத்தனர். அத்துடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
அந்த வகையில், நடந்து வரும் இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எழுச்சி பெற கடுமையாக போராடும். எனவே, அனைவரின் கவனமும் விசாகப்பட்டினம் பக்கம் திரும்பியுள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் முதலாவது 2016ல் இங்கிலாந்துக்கு எதிராகவும், இரண்டாவது 2019ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் நடந்தது.