செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி வெற்றி

3–0 என்ற கணக்கில் தொடரை முழுமையா கைப்பற்றியது

லண்டன், செப்.25-

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா- – இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் அமே ஜோன்ஸ், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணி 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (8.4 ஓவரில்) இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா, தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவுடன் கைகோர்த்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். மந்தனா 50 ரன்னில் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கேட் கிராஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு களம் கண்ட வீராங்கனைகளில் பூஜா வஸ்ட்ராகர் (22 ரன்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

45.4 ஓவர்களில் இந்திய அணி 169 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. கடைசி வரை நிலைத்து நின்ற தீப்தி ஷர்மா 68 ரன்கள் சேர்த்தார். கடைசி ஆட்டத்தில் ஆடிய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி முதல் பந்திலேயே போல்டு ஆனார். இங்கிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனைகள் கேட் கிராஸ் 4 விக்கெட்டும், பிரேயா கெம்ப் 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டென் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மன்கட் முறையில்

ரன் அவுட்

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 43.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 153 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டாக நிலைத்து நின்று ஆடிய சார்லி டீன் 47 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இந்திய பவுலர் தீப்தி ஷர்மா பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் நின்று இருந்த சார்லி டீன் கிரீசை விட்டு முன்னோக்கி நகர்ந்தார். இதனால் தீப்தி ஷர்மா பந்தை வீசாமல் ஸ்டம்பை பந்தால் அடித்து ரன்-அவுட் (மன்கட்) செய்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், கடைசி ஆட்டத்தில் ஆடிய ஜூலன் கோஸ்வாமி 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் ஆட்டநாயகி விருதையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 1999-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல்முறையாக ஒருநாள்தொடரை இந்தியா வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *