லண்டன், நவ. 29–
இங்கிலாந்தில் ஜாக்பாட் லாட்டரியில் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவர் 1804 கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் புகழ்பெற்ற லாட்டரிகளில் ஒன்று யூரோ மில்லியன் லாட்டரி. இதற்கான குலுக்கல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 07, 11, 25, 31, 40, மற்றும் லக்கி ஸ்டார்ஸ் 09 மற்றும் 12 ஆகியவற்றை உள்ளடக்கிய வெற்றி எண்கள் ஜாக்பாட் பரிசு வென்றுள்ளன. அதன்படி 177 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாயில் 1804.161 கோடி ரூபாய் ஆகும்.
இந்த லாட்டரி எண் கொண்ட டிக்கெட் குலுக்கல் முடிவுகளை அறிவித்த நிறுவனத்தின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர், இந்த பரிசு, வெற்றியாளரின் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக தெரிவித்தார். இந்த வெற்றி அவர்களை நாட்டின் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடிக்க வைத்துள்ளது என்றும் கூறினார்.
பணக்காரர்கள் பட்டியல்
இசைக் கலைஞர்களான ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் அடீல் ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 175 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 170 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்நிலையில் லாட்டரி பரிசை வென்றுள்ள நபர் 177 மில்லியன் பவுண்டுகளை பெறுகிறார். இதனால் பணக்காரர்கள் பட்டியலில் இசைக்கலைஞர்களை முந்துகிறார் அந்த அதிர்ஷ்டசாலி.
பிரிட்டன் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்ற பணக்காரர்களின் பட்டியலில், தற்போதைய வெற்றியாளர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 195 மில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் 2000 கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டசாலி நபர் வென்றுள்ளார். அதே ஆண்டு மே மாதம் மற்றொரு அதிர்ஷ்டசாலி 184 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 1840 கோடி ஆகும்.
இதற்கு அடுத்தப்படியாக தற்போது 177 மில்லியன் பவுண்டுகளை அதிர்ஷ்டசாலி ஒருவர் வென்றுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் லாட்டரி வரலாற்றில் மூன்றாவது பெரிய பரிசை பெற்றுள்ளார். இந்த பரிசுத் தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.