சிறுகதை

இஎம்ஐ (EMI) – ராஜா செல்லமுத்து

வீடும் தோட்டமும் சேர்ந்தபடியே இருந்தது பாலுவின் வீடு.

வீட்ற்கு முன்புறமும் பின்புறமும் மரங்கள் வைத்திருந்தார் . காய்கறிகள் செடிகள் பயிரிட்டிருந்தார். சமையலுக்கு தேவையான எதையும் அவர் வெளியில் வாங்குவதில்லை. முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என்ற கீரை வகைகளும் பழங்கள் காய்கறிகள் என்றும் அத்தனையும் தன் வீட்டில் இருக்கிற காலி இடத்தில் பயிரிட்டு இருந்தார் பாலு.

அதோடு வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் என்று வீட்டை சுற்றி நட்டு இருந்தார் .

வேப்ப மரத்தின் நிழலும் தென்னை மரத்தில் இளநீரும் அவர் குடும்பத்தை எப்போதும் இதமாக வைத்திருந்தது.

வேப்பமரத்தில் கூடு கட்டி தங்கி இருந்த காகங்களின் வேலை தான் பாலுக்கு ரொம்ப வருத்தத்தை தந்தது .

என்ன இது நம்ம வீட்டிலயே கூடு கட்டிட்டு குஞ்சு பொறிச்சு நம்மையே கொத்துது என்று கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்தார் பாலு

இல்ல பாலு ,காக்காவுக்கு நல்லவங்களா? கெட்டவங்களான்னு யாரையும் தெரியாது. அது தன்னோட குஞ்சுகள பாதுகாக்கிறதுக்காக அப்படிச் செய்யுது என்று பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாலும் அதைப் பாலு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

என்னங்க நம்ம வீட்டு மரத்துல கூடு கட்டியிருக்கு. நாம அத பாதுகாப்பாகத்தான பாக்கிறோம்; சமயங்கள்ல அதுக்கு எறையும் கொடுக்கிறோம். எங்கேயோ சுத்திட்டு வந்து நம்ம வீட்டுல தான் குடியிருக்கு. நம்ம மரத்துல கூடு கட்டி இருக்கிறதுக்கு வாடகையா கொடுக்குதா? இல்ல லீசுக்கு இருக்குதா?

அப்படி இருக்கும் போது நம்மள போகும்போதும் வரும்போதும் தலையில காெத்துது . அதனால இந்த வேப்ப மரங்கள வெட்ட போறேன் என்று பாலு சொன்னபோது கொளுத்தும் வெயிலில் நிழல் கொடுத்த அந்த மரத்தை பாலு வெட்ட போகிறார் என்று தெரிந்து பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் வருத்தப்படத் தான் செய்தார்.

மொத்த மரத்தையும் வெட்டலங்க. வீட்டுக்கு முன்னாடி இருக்கிற மரத்த மட்டும் தான் வெட்ட பாேறேன். வீட்டுக்கு பின்னாடி ஒரு மரம் இருக்கு .அந்த மரத்துல கூடு கட்டி இருந்தாலும் காக்கா இந்த பக்கம் வராது என்று சொன்னபடியே ஓரிரு நாட்களில் அந்த இரண்டு மரத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்தார் பாலு.

காக்கைக்குப் பயந்து பிடுங்கி எறிந்தார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வேப்ப மரத்தின் வேர்கள் வீடுகளில் பரவி இருந்தது அந்த வேர்களின் தாக்கம் வீட்டை உடைப்பதாக இருப்பதாகவும் ஒரு காரணம் காட்டினார் பாலு.

இது ஒரு பக்கம் இருக்க, ஐம்பது நாட்களுக்கு ஒரு முறை தான் வைத்திருந்த இரண்டு தென்னை மரங்களிலிருந்து குலை குலையாக காய்க்கும் தேங்காய்களை பறிப்பதற்கு அவரால் இயலவில்லை.

30 அடி உயரம் இருக்கும் தென்னை மரத்தைப் பார்த்தாலே அவருக்கு பயம் வரும்.

எப்பா இவ்வளவு ஒயரத்துல ஏற வேண்டாம் என்று அவர் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி இருக்கும் முனியனை தான் தென்னை மரம் ஏறுவதற்கு கூப்பிடுவார் .

ஒரு மரத்திற்கு 150 ரூபாய் என்று இரண்டு மரங்களையும் அவர் பழுது பார்ப்பது தேங்காய் பறிப்பது இளநீர் பறிப்பது என்று எந்த வேலைக்கும் முனியனைத் தான் கூப்பிடுவார் .

ஒருமுறை கொத்தாக இருந்த இளநீர் மொத்தமாக கீழே விழுந்தது. 30 இளநீருக்கு மேல் இருக்கும் குலை கீழே விழுந்ததால் அவர் குடும்பத்தினால் மொத்தமாக குடிக்க முடியவில்லை.

பக்கத்து வீடு, நண்பர்கள் என்று கூப்பிட்டு கொடுத்தார் . சில பேர் பனிகாலம் என்று இளநீர் குடிக்காமல் ஒதுங்கி நின்றார்கள்.

மீதம் இருக்கும் 20 இளநீரை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பாலு.

தன் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், இளநீர் இவற்றை அவர் யாருக்கும் பணத்துக்காக விற்பனை செய்வதில்லை என்று அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. யார் கேட்டாலும் அதை இலவசமாகத் தான் தருவாரே ஒழிய பணத்திற்காக விற்கக் கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார்

இரண்டு நாட்களுக்குள் முன் முனியனைக் கூப்பிட்டிருந்தால் இளநீரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நினைத்த பாலு மீதம் இருக்கும் இளநீரைத் தேங்காயாக வரும் வரை காப்பாற்ற வேண்டும் என்று முனியனுக்கு போன் செய்தார்.

முதலமைச்சரைக் கூட சந்தித்து விடலாம் போல ஆனால் முனியனை சந்திப்பது மிகவும் சிரமம் .

சென்னையில் உள்ள அத்தனை தென்னை மரங்களுக்கும் அவர் தான் ஏணி. அதனால், அந்த மனிதனுக்கு மவுசு கொஞ்சம் அதிகம். அவரைப் பிடிப்பதற்கு முன் அனுமதி பெற்று தான் அவரை வீட்டிற்கு வரவழைக்க முடியும்.

அதன்படியே அன்று பாலுவின் வீட்டிற்கு வந்தார் முனியன். தென்னை மரத்தை பழுது பார்த்து விட்டு தொங்கும் இளநீரை மட்டைகளில் கட்டி விட்டு கீழே இறங்கினார் முனியன்.

பாலு சார் என் பையனுக்கு ஒரு வண்டி வாங்கலாம்னு இருக்கேன் ; எந்த வங்கி வண்டி வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும் என்று கேட்டார் முனியன்.

எளந்தாரி பையன் தானே உன் மகன். அவனுக்கு பல்சர் வாங்கி கொடுங்க. நல்லா இருக்கும் என்றார் பாலு .

பல்சர் எவ்வளவு ஆகும் என்று முனியன் கேட்டபோது

என்ன ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று பாலு சொன்னார்

தென்னை மரம் ஏறி பிழைப்பு நடத்தும் , முனியனால் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்த இரு சக்கரத்தை வாகனத்தை வாங்க முடியுமா? என்ற ஒரு சந்தேகம் பாலுவுக்கு இருந்தது.

என்ன முனியா ஒரு லட்ச ரூபா கொடுக்க முடியாட்டி பரவாயில்ல. ஒரு பத்தாயிரம் ரூபாய் குடுத்து வண்டியை வாங்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமா இஎம்ஐ ல கட்டலாம் என்று சொன்னார் பாலு .

வண்டிய வாங்கிட்டு கை மேல காசு குடுத்திட்டு அடுத்த நொடியே வண்டியை வீட்டுக்கு ஓட்டிட்டு வராம, நம்ம ஏன் கடனுக்கு வாங்கணும். அதெல்லாம் சரிப்பட்டு வராது பாலு சார்.

காசு கொடுத்தோமா வண்டி வாங்கனமான்னு இருக்கணும் . அதான் நமக்கு சரி . கடன்காரன் வந்து வீட்டு வாசல்ல நிக்கிறது நல்லா இருக்குமா என்ன பாலு சார்? என்று சொன்ன முனியனைப் பார்த்து விழித்து நின்றார் பாலு.

முனியன் சொன்ன இரண்டு நாட்களுக்கு எல்லாம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கொடுத்து அந்த பல்சரை எடுத்துக் கொண்டு தன் மகனையும் கூட்டி வந்து வண்டியோடு பாலுவிடம் ஆசிர்வாதம் வாங்கினார் முனியன்.

முனியனைக் கண்ட பாலுவிற்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

என்ன இது தினக்கூலி படிப்பறிவு இல்லாதவர் . இவங்ககிட்ட எங்க பணம் இருக்கு. அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தாேம். ஆனா ஒரு லட்சத்துக்கு மேல கொடுத்து வண்டி வாங்கக்கூடிய வசதி இருக்கு. அதவிட யார்கிட்டயும் கடன் வாங்க கூடாது அப்படிங்கிற எண்ணமும் சுயமரியாதையும் ஒருசேர கலந்திருக்கு .

ஆனா படிச்சவங்க ; பணக்காரங்க ; பணத்த வச்சிட்டு கூட அத மொத்தமாக கொடுக்கிறதுக்கு வருத்தப்பட்டு, இஎம்ஐ அப்படிங்கிற பேர்ல மாசா மாசம் பணத்தை கட்டுறாங்க. படிச்சு கடன் வாங்கி வாழ்க்கை நடத்துற மத்தவங்க

எங்கே ? ஏழையாக இருக்கிற முனியன் என்னங்கே? என்று மனதிற்குள் நினைத்தார் பாலு.

அந்த நினைவில் இருந்தவரை

சார் வரேன் என்று முனியன் சொல்லியபடியே தன் மகன் பல்சரின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார்.

அப்பாேது பாலுவின் மனைவி வீட்டிற்குள் இருந்து உரக்க குரல் கொடுத்தார்.

ஏங்க நம்ம வீட்டுக்கு ஒரு எல் இ டி டிவி வாங்கணும்னு சொன்னீங்களே என்னாச்சு? என்று மனைவி கேட்க

வாங்கலாம் இப்ப கையில காசு இல்ல. காசு வரும் போது வாங்கலாம் என்றார் பாலு .

டிவி வாங்குறதுக்கு காசு எதுக்குங்க .ஐநூறு ரூபா டெபாசிட் கட்டிட்டு, மாசாமாசம் இஎம்ஐ கட்டலாமே? என்று பாலுவின் மனைவி சொன்னபோது. முனியனை திரும்பிப் பார்த்தார் பாலு,

முனியன்,தன் மகனின் பல்சர் பைக்கில் அமர்ந்து மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *