செய்திகள்

ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை, மார்ச்.28-

முதலமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அண்ணா தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில இணைச்செயலாளர் திருமாறன் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்காக அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா கடந்த 26-ந்தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பேசினார். அவர் பேசிய வார்த்தைகள், இந்திய தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளன.

ஆ.ராசா ஏற்கனவே முதலமைச்சருக்கு எதிராக இதுபோன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார். அதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவருக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், அவர் தொடர்ந்து முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் எதிராக இதுபோன்று பேசி வருகிறார். இதன்மூலம் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் மீதான மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். எனவே ஆ.ராசா மீது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதோடு, அவர் இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ஆ,ராசா ஆபாசமாகவும், நாகரீகமற்ற முறையிலும் தனிநபர் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சு, மக்கள் மத்தியில் அவமான உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான திண்டுக்கல் லியோனி, கோவை தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் செய்தபோது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசினார். எனவே இவர்கள் 2 பேர் மீதும் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, 2 பேரும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *