செய்திகள்

ஆ. கோபண்ணா எழுதிய “பாசிசம் வீழட்டும்; தேசியம் மீளட்டும்!” புத்தகம்: செல்வப்பெருந்தகை வெளியிடார்

ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்

சென்னை, மார்ச் 29-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆ. கோபண்ணா எழுதிய ” பாசிசம் விழட்டும்; தேசியம் மீளட்டும்” என்ற தேர்தல் பரப்புரை புத்தகத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பெற்றுக் கொண்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய “பாசிசம் வீழட்டும்-தேசியம் மீளட்டும்” என்ற தேர்தல் பிரச்சார புத்தக வெளியீட்டு விழா இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சித் குமார் வரவேற்புரை ஆற்றினார். “பாசிசம் வீழட்டும்- தேசியம் மீளட்டும்” என்ற தேர்தல் பரப்பரைப் புத்தகத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெளியிட, முதல் படியினை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பெற்றுக்கொண்டார்.

இந்தியா கூட்டணியின் சாட்டை

நிகழ்ச்சியில் கு. செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

“பாசிசம் வீழட்டும்- தேசியம் மீளட்டும் ” என்ற இந்த புத்தகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் 10 ஆண்டுகால கொடுங்கன்மை தோல் உரித்து காட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு என்னென்ன கேடுகளை, மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது என்பதும் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இதனை இந்தியா கூட்டணி பேச்சாளர்கள் மட்டுமின்றி, மக்களும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான புத்தகமாக, காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கோபண்ணா வடிவமைத்துள்ளார். மேலும் புனித வெள்ளி நாளில் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பாரதீய ஜனதா கட்சியை விரட்டியடிக்க சாட்டையை எடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இருந்து தீப்பொறி புறப்பட்டு உள்ளது. அது அநீதியை அழிக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் தேர்தல் பத்திர விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை, பாஜக நடத்தியுள்ள ஊழல்கள் அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மோடியின் முகத்திரை கிழியும்

புத்தகத்தை பெற்றுக் கொண்ட திமுக அழைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியதாவது:-

எனது 62 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில், காங்கிரஸில் கோபண்ணாவின் பங்களிப்பை தொடர்ந்து கவனித்து வந்துள்ளேன். அவருடைய எழுத்துக்களுக்கு நான் வாசகனாகவும் இருந்து வருகிறேன். குறிப்பாக கோபண்ணா அவர்கள் எழுதியுள்ள “நேருவின் வரலாறு” ஆவணம் என்றே சொல்ல வேண்டும். அதுபோல் இன்றைக்கு எழுதி வெளியிட்டுள்ள “பாசிசம் வீழட்டும்- தேசியம் மீளட்டும்” என்ற இந்த புத்தகம் தேர்தலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புத்தகத்தில் உள்ள 54 கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் சொன்னால், மோடிக்கு, பாஜகவுக்கு யாருமே வாக்களிக்க மாட்டார்கள். இந்த புத்தகம் மோடியின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் இருந்து எனது பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். அவர் கூறும்போது, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வடமாநிலங்கள் முழுவதும் மோடிக்கு எதிரான ஒரு அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதனை பாஜக உணர்ந்துள்ளது. அதனால் வாக்கு எந்திரத்தில் ஏதாவது மோசடி செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று என்னிடம் தெரிவித்தார். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எங்கள் தலைவரிடம் நான் அனுமதி பெற்றுள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்கள் திட்டமிட்டுள்ள மோசடியை நிச்சயமாக தடுத்து நிறுத்துவோம். அதன் மூலம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதையும் இந்த இடத்தில் நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக நூல் ஆசிரியர் ஆ.கோபண்ணா பேசியதாவது:-

10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியின் அவலங்களை இந்த புத்தகத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறேன். இது அரசியல் கட்சிகளுக்கும் குறிப்பாக இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெருமளவில் பயன்படும். பரப்புரையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது எனது தேர்தல் அரசியல் பங்களிப்பு என்று கருதுகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.திரவியம்,ஜே. டில்லிபாபு, சிவ. ராஜசேகரன் ஆகியோருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். ஏ. வாசு , எம்.ஏ. முத்தழகன், அடையாறு த. துரை உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *