செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட்

Makkal Kural Official

சிட்னி, ஜன.3–

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நடந்த பகல் -இரவு டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.

மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2–-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் மற்றும் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கடந்த போட்டிகளை போலவே இதிலும் பேட்டிங்கில் தடுமாறியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கே.எல்.ராகுல் 4 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் –- கோலி ஜோடி 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. கில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிஷப்பண்ட் இந்த முறை அணியின் நலன் கருதி பொறுமையாக விளையாடினார். மறுமுனையில் முதல் பந்திலேயே கேட்ச்சில் இருந்து தப்பிய விராட் 17 ரன்களில் போலன்ட் வீசிய அவுட் சைடு ஆப் பந்தில் வீழ்ந்தார். 69 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பண்ட் உடன் ஜடேஜா இணைந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

இந்திய அணி இந்த இன்னிங்சில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த முறை இந்திய வீரர்களின் உடலை நோக்கி பந்து வீசினார்கள். ஸ்டார்க் பந்துவீச்சில் பண்ட் ஒருமுறை தலையிலும், ஒருமுறை கையிலும் பலத்த அடி வாங்கினார். இதனால் அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

பொறுமையாக விளையாடிய பண்ட் 40 ரன்களிலும் அவரை தொடர்ந்து ஜடேஜா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் பும்ரா 22 ரன்கள் அடித்து அணி கவுரவமான நிலையை எட்ட உதவினார். முடிவில் 72.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது. கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *