செய்திகள்

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மேலும் ஒரு இந்து கோவில் சூறை

மெல்பர்ன், ஜன. 19–

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்த அமைப்பினர் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா – விஷ்ணு கோவிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்த பொருள்களை அவர்கள் அடித்து சூறையாடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

ஆஸ்திரேலியாவில் தைப்பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது இந்த சிவா – விஷ்ணு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் வரும்போது கோவில் மோசமான நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் இவ்வாறு செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக விக்டோரியா மாகாண போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவிலுக்கு வந்த ஒருவர் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘இலங்கையில் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுதான் ஆஸ்திரேலியாவில் குடி புகுந்துள்ளோம். இது இந்துக்கள் அமைதியாக வழிபாடு நடத்தும் கோவில்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் கோபத்தை இந்த இடத்தில் காட்டுவது சரியல்ல. இது அவர்களது மோசமான வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாடு நடத்தும் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல’’ என்றார்.

இதுகுறித்து லிபரல் கட்சி எம்.பி. பிராட் பட்டின் கூறும்போது, “எந்த வகையிலும் நம் எதிர்காலத்தை வெறுப்பின் அடிப்படையில் கட்டியெழுப்ப முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *