சினிமா செய்திகள்

‘ஆஸ்கார்’ அகாடமி தேர்வுக்குழுவில் உறுப்பினராகும் நடிகர் சூர்யா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூன் 30–

“தி அகாடமி” விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஆஸ்கார்’ விருது என்பது ஒவ்வொரு நடிகர்- – நடிகைக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம் ஆகும். ‘ஆஸ்கார்’ அகாடமியின் (ஆஸ்கார் விருது குழு) கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கார் விருது குழுவில் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெறுகிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் வாழ்த்து

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, “தி அகாடமி” விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை! என தெரிவித்துள்ளார்.

நல்ல படைப்புகளைத் தர முயற்சி

இந்நிலையில், நடிகர் சூர்யா ஆஸ்கார் அகாடமி குழுவிற்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினராக இணைய ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்” என பதில் அளித்துள்ளார்.

சூர்யா போல, இந்தி நடிகை கஜோல் உள்பட உலகம் முழுவதும் 397 பேருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் கூட சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படம், ‘ஆஸ்கார்’ விருதுக்கு பக்கத்தில் சென்று திரும்பியது. இதனால் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் தற்போது மற்றொரு கவுரவம் சூர்யாவை தேடி வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.