சிறுகதை

ஆவி…! – இரா.இரவிக்குமார்

பட்டுக்கோட்டையில் ரகு மாமா வீட்டில் தங்கியிருந்தான்.

அவன் தாத்தா சிவராமன் வீட்டின் திண்ணையில் இரவில் படுத்து உறங்குவார். முன் பின் வாசல் கதவுகளைத் தாழிட்டு வீட்டினுள் மற்றவர்கள் தூங்குவார்கள்.

வீட்டின் பக்கவாட்டு வழியைப் பின் முற்றத்தின் கழிவறைக்குச் செல்ல இரவில் தாத்தா பயன்படுத்தியதால் வீட்டினுள் தூங்குபவர்களை எழுப்பத் தேவையில்லை.

அன்று இரவு ஒரு மணி. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு ரகு கதவைத் திறந்தான்.

“டேய், பால்காரி பால் கொண்டுவந்து பின்கதவைத் தட்டிக் குடுத்தாளா?” என்று தாத்தா கேட்டார்.

அப்போது தூக்கக் கலக்கத்தோடு ரகுவினருகே வந்து நின்ற பாட்டி,

“ஏங்க… அர்த்த ராத்திரியிலே பால்காரி பால் கொண்டுவந்தாளானு கதவைத் தட்டிக் கேட்டு உசிர வாங்குறீங்க?” என்றாள் சலிப்புடன்.

“இல்ல, பால்காரி மூனு தடவை என்னச் சுத்திக் கையில் பால்செம்போடு பக்கவாட்டில பின்புறம் போனா… அதான் கேட்டேன்!”

“ஏதாவது கனவு கண்டிருப்பீங்க… பேசாம போய்ப் படுங்க!” என்று விரட்டினாள் பாட்டி.

மறுநாள் இதனால் எல்லோரது மனதிலும் கிலி பற்றிக்கொண்டது. ஆனால் தாத்தா வெளியில் படுப்பதை நிறுத்தவில்லை.

மறுவாரமும் இரவு ஒரு மணி. தாத்தா மீண்டும் கதவைத் தட்ட இம்முறை பாட்டியே கதவைத் திறந்தாள்.

“ஏய், வேலைக்காரி வந்தாளா?… என்ன மூனு முறை சுத்திட்டுப் பின் வாசலுக்குப் போனா!”

“உங்களுக்கு மூள கீள குழம்பிட்டா?” – பாட்டி தாத்தாவிடம் எரிந்து விழுவது ரகுவுக்குக் கேட்டது! இது வீட்டை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

அதற்கு அடுத்த வாரம் தாத்தா இரவு ஒரு மணிக்கு பூக்காரி வந்ததாகக் கதவைத் தட்ட மொத்தக் குடும்பமும் பீதியில் உறைந்தது.

“இது கிராமத்தில தாத்தாவைக் காதலிச்ச முழிச்சி ஆவி! அவ செத்து பதினாறு நாள் ஆச்சு. இன்னிக்கு அவளுக்கு அங்க கருமாதி. இனி அவ இங்க வர மாட்டாள்!” என்று பாட்டி தாத்தாவிடம் தான் மறைத்த செய்தியைச் சொன்னாள்!

பாட்டி சொன்னது போல் நடந்தது!

“பாட்டி முழிச்சி ! உன் உருவத்தில வந்து தாத்தாவை ஏமாத்தியிருக்கலாமே?” என்று ரகு கேட்டான்.

“டேய், நான் பெருமாள வழிபடுறதால ஆவி, பேய், பிசாசு எல்லாம் நெருங்காது! என் இடுப்பில சின்ன வயசிலே சங்கு, சக்கரம் சுட்டு தீட்சை வாங்கினதால முழிச்சி ஆவியால அப்படிச் செய்ய முடியலை!” என்றாள் பாட்டி பெருமையாக.

ரகுவுக்கோ தலை சுற்றியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *