சென்னை, ஜூலை 29–
ஆவின் வட்டார அலுவலகங்களிலும் மற்றும் விநியோக மையங்களிலும் மாதாந்திர பால் அட்டையை டிஜிட்டல் பணவர்த்தனை மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வரும் ஆவின் நிறுவனம் பொதுமக்கள் விரும்பும் வகையில் நீலம் (கொழுப்பு சத்து 3.0 %, இதர சத்து 8.5%), பச்சை(கொழுப்பு சத்து 4.5%, இதர சத்து 8.5%) மற்றும் ஆரஞ்சு (கொழுப்பு சத்து 6.0%, இதர சத்து 9.0%) வண்ண பாக்கெட்டுகளில் நுகர்வோர் தேவைக்கேற்ப ஆவின் பாலினை விற்பனை செய்து வருகிறது.
நுகர்வோர்கள் தங்கள் மாதாந்திர பால் அட்டைகளை எளிதில் பெற ஆவின் வட்டார அலுவலகங்களிலும் (Zonal Office) மற்றும் ஆவின் பால் விநியோக மையங்களிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.
வட்டார அலுவலகங்களில் உள்ளதை போலவே மாதாந்திர பால் விநியோக மையங்களிலும் பால் அட்டை புதுப்பிக்கும் தொகையினை டிஜிட்டல் முறையில் Gpay, கி.ஆர். கோடு குறியீடுகள், மற்றும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேரடி பண பரிவர்தனையைக் குறைக்கவும், எளிமைப்படுத்தவும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவின் இணையதளம் (www.aavinmilk.com) மூலமாக பொதுமக்கள் தங்களது பால் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.