சென்னை, ஆக.23–-
ரேஷன் கடைகளில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழகத்தில் இயக்கும் 45 கூட்டுறவு பண்டக சாலை மற்றும் 115 விற்பனை சங்கங்களுக்கு ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் நெய், வெண்ணெய், பன்னீர், பால்கோவா, பிஸ்கட் உள்பட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் புதிய பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது. ஆவின் விற்பனையகங்களில் மட்டுமின்றி ரேஷன் கடைகள் மூலமாகவும் இந்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2022–-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் எழுந்தது. அப்போது கூட்டுறவுத்துறையுடன் இணைந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்தது.
தற்போது ஆவின் நிறுவனம் கூட்டுறவுத்துறையுடன் கைக்கோர்த்து ரேஷன் கடைகளில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு முனைப்பு காட்டி உள்ளது. இந்த முயற்சியின் தொடக்கமாக தமிழகத்தில் இயக்கும் 45 கூட்டுறவு பண்டக சாலை மற்றும் 115 விற்பனை சங்கங்களுக்கு ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரிமத்தை பெற்று சென்னை மண்ணடியில் இயங்கி வரும் காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ‘ஆவின்’ பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த பண்டக சாலையில் ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து இந்த பண்டக சாலையின்கீழ் சென்னை தண்டையார்ப்பேட்டை, குரோம்பேட்டை, ஆலந்தூர், மாமல்லபுரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் 425 ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விரைவில் விற்பனை செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் படிபடியாக ஆவின் பொருட்களை விற்பனை செய்வதற்கும், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் தயாரிப்பு இனிப்புகளை விற்பனை செய்வதற்கும் சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் உடனடியாக கெட்டுப்போகாத ஆவின் நெய், பிஸ்கட், முறுக்கு, இனிப்பு வகைகள் மட்டும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும், விரைவில் கெட்டுப்போக கூடிய பால், வெண்ணெய், பன்னீர் போன்ற பொருட்களை கையாள்வதற்கு குளிர்சாதன பெட்டி தேவைப்படும் என்பதால் அந்த பொருட்கள் விற்பனை செய்யப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.