செய்திகள்

ஆவடியில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டா: அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் வழங்கினர்

திருவள்ளூர், ஜூன் 18–

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 600 பயனாளிகளுக்கு ரூ. 335.133 கோடி மதிப்பிலான விலையில்லா பட்டாக்களை அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், தண்டுரை தனியார் திருமண மண்டபத்தில் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் 600 பயனாளிகளுக்கு ரூ. 335.133 கோடி மதிப்பில் 54.6 ஏக்கர் பரப்பிலான நிலத்திற்கு பட்டாக்களை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பென்ஜமின் பேசியதாவது::

அம்மாவின் வழியில் நல்லாட்சி செய்து வரும் முதலமைச்சரின் ஆணையின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 600 பயனாளிகளுக்கு இன்று பட்டா வழங்கப்படுகிறது. பட்டா நிலத்தில் குடியிருக்கிறோம் என்று பெருமையாக சொல்வதற்கு அம்மா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. ஆவடி வட்டத்தில் ரூ.335.133 கோடி மதிப்பில் 54.6 ஏக்கர் பரப்பிலான நிலத்திற்கு பட்டாக்களை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது::

வெகு வேகமாக வளர்ந்து வரும் ஆவடி பகுதியில் பாதிக்குப் பாதி பட்டா இல்லா நிலங்கள் உள்ளது. ஒரு வருடத்தில் 8000 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்திருக்கிறோம். பட்டா இல்லாத 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு பட்டா முழுமையாக கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், முதலில் நீர் நிலைகளை சரி செய்வோம். பருத்திப்பட்டு ஏரி ஒரு நல்ல இயற்கை பூங்காவாக ரூ. 32 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளது.

உலக தரமிக்க ஒரு டைடல் பார்க். 30000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க எதிர்பார்த்திருந்ததில் முதற் கட்டத்திலேயே 8000 நபர்களுக்கு வேலை கிடைக்க திசை உருவாகியுள்ளது. 10 ஏக்கரில் உள்ள டைடல் பார்க்கில், சுற்றியுள்ள 28 ஏக்கரை மிகப் பெரிய சாப்ட்வேர் எடுத்திக்கிறது. கடந்த 3 வருடங்களில் 15-வது பூங்காவாக அம்ருத் பூங்கா திறந்து வைத்துள்ளோம். ஒரு பக்கம் இயற்கை பூங்கா, ஒரு பக்கம் தொழிற் பூங்கா மற்றொரு பக்கம் வெகுவான பார்க், இவையெல்லாம் சேர்ந்து ஆவடி ஒரு உன்னதமான இடமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய சாப்ட்வேர் கம்பெனி. 1000 நபர்களுக்கு மேல் வேலை கிடைக்க அடுத்த மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆவடியில் நிறைவு பெறவுள்ள அம்மா திருமண மண்டபம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை திறக்கப்படவிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து ஆவடி நகராட்சி, புனித பிரான்சிஸ் நகரில் ரூ. 93.73 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை அமைச்சர்கள் திறந்து வைத்து, பூங்காவினை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பின வி.அலெக்சாண்டர், தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், ஆவடி நகராட்சி ஆணையர் ஜோதிகுமார், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், நரக செயலாளர் தீனதயாளன், முல்லை தயாளன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *