ஆவடி, பிப். 18–
ஆவடியில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 1.5 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் தனது வாட்ஸ் அப்புக்கு வந்த விளம்பரத்தை கண்டு ஆன் லைன் வர்த்தகம் செய்வதற்காக ரூ. 1,56,05,841 அனுப்பி உள்ளார். பின்னர் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயற்சி செய்தும் பணத்தை பெறமுடியாத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையாளரி்டம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் வழிகாட்டுதலின்படி இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அறிவுறுத்தலின்படி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் விசாரணை நடத்தி புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் (41), அஜித்குமார் (29) ஆகிய 2 பேரும் பணத்தை பெற்றுக்கொண்டு தனது வங்கி கணக்கை மோசடி நபர்களுக்கு கொடுத்து மோசடி பணத்தை கைமாற்றுவதற்கு உதவியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.