தலையங்கம்
இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சர் சமுத்திரயான் பணியின் மேம்பாட்டு செய்திகள் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்தியா தனது விஞ்ஞானிகளை கடல் மேற்பரப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலை ஆராய அனுப்பவுள்ளது.
மத்ஸ்யா 6000 என்ற ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் ஆழமற்ற நீர் சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
புதிய சாதனையின் மூலம் வெளிச்சம் கூட எட்டாத கடலின் 6,000 மீட்டர் ஆழத்தை ஆராயும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அமைச்சர் உற்சாகமாக தெரிவித்தார்.
“மத்ஸ்யா 6000 என்பது மனிதர்களை உள்ளே அழைத்துச் செல்லும் முதல் இந்திய நீர்மூழ்கிக் கப்பல். இது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றார் அவர்.
சமுத்திரயான் பணி வெற்றிகரமாக முடிந்தவுடன், இந்தியா ஆழ்கடல் ஆராய்ச்சியில் திறன் வாய்ந்த நாடுகளின் உயரடுக்கு குழுவில் இணையும். தற்போது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த உயர்நிலை ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளன.
இந்த உயரடுக்கு குழுவில் இந்தியாவின் நுழைவு, கடலின் சவாலான பகுதிகளில் செயல்படும்நிபுணத்துவத்தையும் திறனையும் வெளிப்படுத்தும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு வரவிருக்கும் பட்ஜட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, பல்லுயிர் பெருக்கத்தை மதிப்பிடும், மேலும் கனிமங்கள் மற்றும் கோபால்ட், நிக்கல், மாங்கனீசு போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை தேடும் பணியில் கவனம் செலுத்தும். மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பாலிமெட்டாலிக் முடிச்சுகளை வெட்டியெடுத்து, காலநிலை மாற்ற கட்டமைப்புகள் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்ளும்.
இது இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் முன்னேற்றத்தில் மாபெரும் அடித்தளமாக அமையும்.