கணேசன் அன்று பத்மநாபன் வீட்டிற்கு வந்து இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் நடுவில் கணேசன் தன் வீட்டில் தனது மகன் மற்றும் மகளுக்கு அடிக்கடி நடக்கும் சண்டைகள் பற்றிக் கூறினார். சில சமயங்களில் நான் சிறு வயதில் போட்ட சண்டை பற்றி நினைவுக்கு வந்தாலும், தற்போதுள்ள இளைஞர்கள் போக்கு வேறு விதமாக உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதாகக் கூறினார். பல நேரங்களில் இருவரும் சந்தித்துக் கொள்வதே கிடையாது. நடக்கும் காரியங்களில் தங்கள் பங்கு இருந்தால் அதில் யாருக்கு லாபம் என்று அலசி ஆராய்கின்றனர் என்றார். தங்களுக்கு தனி அறை வேண்டுமென பிடிவாதம் பிடிக்க நான் அவர்களுக்கு என்று தனி அறைகள் கட்டியுள்ளேன். அந்த அறைக்குள் புகுந்தால் அங்கேயே அடங்கி விடுகிறார்கள் என்றார். அவர்கள் உலகம் கணினியும், கைப்பேசியும் தான். அவர்கள் கேட்டு நான் பணம் தர தாமதமானால் பல பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது என்றார். எந்த விஷயமாக இருந்தாலும் அவர்கள் அவங்க அம்மாவிடம் சொல்வார்கள். அவள் பின்னால் என்னிடம் கூறுவார். அவர்கள் சொல்லும் கருத்துக்கு எதிராக ஏதாவது கூறினால், அம்மா பிள்ளைகள் ஒன்று சேர்ந்து போர்க்கொடி பிடிக்கின்றார்கள் என்றார். அந்தக் காலத்தில் நாம் அப்பாவிடம் ஏதாவது கேட்க வேண்டுமானால், எவ்வளவு தயங்கி கேட்போம். சுதந்திரம் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்ததை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என்றும், அப்பா சொல்லும் படிப்பைத் தாம் நாம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்றார். இப்போது பிள்ளைகளுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்துள்ளது, அவர்கள் விரும்பும்படி படிக்கின்றார்கள். கால மாற்றத்தில் அவர்களே தங்கள் திருமணத்தையும் முடிவு செய்து கொள்கின்றனர் என்றார். நாம் நமக்கென்று பணத்தை சேமித்து வைத்தால் தான் பிற்காலம் சிரமமில்லாமல் இருக்கும் என்பது நடைமுறை சாத்தியமாக உள்ளது என்றார். எனது நண்பர் தன் பையனிடம், எனது இறுதிச் சடங்கு செலவுக்கு என ஒரு வைப்புத் தொகை வைத்துள்ளேன், நீ சிரமப்பட வேண்டாமென்றதும், அவர் பையன் உனது செலவிற்காகத் தானே வைத்துள்ளாய் என்றதும், நண்பர் வாயடைத்துப் போனார் என்றார். வளர்ந்த பிள்ளைகள் வளர்த்தவர்களை புறக்கணிக்கின்றனர். எனது வழி தனி வழி என்று மார் தட்டுகின்றனர் என்றார். ஒருவரின் குணம், நடைமுறைச் செயலை வைத்து முடிவு பண்ண காலம் போய், பணம் தான் தற்போது முடிவு செய்கிறது என்றார். சில சமயங்களில் வாழ்க்கை போதுமென்ற நிலையே தோன்றுகிறது என்றார்.
இதன் பின் பத்மநாபன் கணேசனைப் பார்த்து, சில செய்கைகள் நேராக நடக்கும் காலம், நேர்மறையாக நடக்கும் காலம் என அமைந்து விடும். அண்ணன் தங்கையோ, அக்கா தம்பியோ ஒரு வீட்டில் இருந்தால் சிறு வயது முதலே இருவரிடம் ஏற்படும் உறவுச் சங்கிலி ஆழமான வேர் போன்றது. தங்கைக்குக் கொடு, தங்கையுடன் நான் விளையாடுகிறேன், தங்கை சாப்பிட்டாளா, அவள் ஏன் அழுகிறாள் என்று அண்ணன் சிறு வயதில் தங்கையையே வலம் வருவதை நாம் அறிவோம். பள்ளிப் பிராயத்தில் தங்கைக்கு அண்ணன் நிறைய உதவுவான். தங்கையை யாராவது தப்பாக பேசி விட்டால் சினம் கொண்டெழுந்து அவளுக்காக முன் நிற்பான். தான் தங்கையுடன் சண்டை போட்டால் மறுகணம் அவளுடன் வலியப் போய் பேசுவான். தங்கையும் அண்ணனிடத்தில் உயிரையே வைத்திருப்பாள். அண்ணனை அப்பா கண்டித்தால், அவனுக்குத் தெரியாமல் அப்பாவிடம் அவனுக்காக பேசி அவரை சமாதானப்படுத்துவாள். கண்மூடித்தனமாக அம்மா அவனுக்கு பரிந்து பேசினால், கண்டிப்பாள். அண்ணனே உலகம் என்றும், தங்கையே உலகம் என்றும் வலம் வந்த நாட்கள் எல்லா இல்லத்திலும் இருந்த காலம் உண்டு. தற்போது தொழிற்நுட்ப வளர்ச்சியால், கைப் பேசிக்கு அடிமையாகி உறவுகள் அந்தக் காலம் போல் ஆழமாக செல்வது குறைந்து உள்ளது. தான் எடுக்கும் முடிவே சரியென்று பிடிவாதம் பிடிக்கும் காலமிது. மாற்றுமத திருமணம் நிகழ்வு நமது கலாசாரத்திலே ஊடுருவுகிறது. தற்கால சமுதாயம் வயது மற்றும் பாலின வித்தியாசமின்றி போதைக்கு அடிமையாகின்றது.
அண்ணன் வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் வாங்கியதும் தங்கைக்காக ஒரு பொருள் வாங்கி அவளை மகிழ்வித்தது அந்தக் காலம். ஆன்லைனில் வாங்கி ஆனந்தம் அடைவது இந்தக் காலம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குடும்பத்தின் மீது பிடிப்பு அதிகம். அண்ணன் தனிக் குடித்தனம் சென்றால் தாய் தந்தையரிடம் போகட்டும் விட்டு விடு, அவன் தன் மனைவியுடன் வாழ ஆசைப்படுகிறான் என்று சொல்லி கடைசிக் காலம் வரை அவர்களை தன் நிழலில் வைத்துக் காப்பாள் தங்கை. சில வீடுகளில் அண்ணன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பேன் என்றால், தங்கை போர்க் கொடி ஏற்றி அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்று கடைசி வரை காப்பாத்துவாள். இதற்கிடையில் அண்ணன் வரவேயில்லையே என்று பெற்றோர் கூறினால், அவனுக்கு வாய்த்தவளை சமாளிப்பதிலேயே சிரமப்படுகிறான் என்று அவனுக்குக்காக பரிந்து பேசுவாள் தங்கை.
வேர்கள் ஆழமாக சென்ற பின் சல்லி வேர்கள் ஆக்கிரமிப்பது போன்று, அண்ணன் தங்கை இவர்களின் ஆழமான உறவு வேர் என்றும் நிலைத்திருக்கும். சல்லி வேர் போன்று இடையில் ஆக்கிரமித்து நிற்பவை ஆழமான வேர்களை அழிக்க முடியாதது போன்றது தான் அண்ணன் தங்கை உறவுகள். தங்கைக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லையென்றால் உடனே பறந்து ஓடி வந்து வருவான் அண்ணன் எக்காலத்திலும். பிரிவு வேண்டுமானால் ஏற்படலாம். உறவுச் சங்கிலி அறுந்தாலும், அண்ணன் தங்கை என்ற சொல் மாறவே மாறாது என்றார்.
இதைக் கேட்ட கணேசன். உறவில் பேதம் ஏற்படலாம், ஆனால் அதை அழிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் என்றார். என்னதான் சோதனை, வேதனை வந்தாலும் உறவு என்னும் பாச மலர் என்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே தான் இருக்கும் என்று கூறி விட்டு கணேசன் விடை பெற்றார். அப்போது பத்மநாபன் தங்கை உள்ளே வர, பத்மநாபன் முகத்தில் உறவுப் புன்னகை பூத்துக் குலுங்கியது,