நெல்லை, அக். 26
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, துணைவேந்தர் சந்திரசேகரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் கமிஷனர் கீதா மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அங்குள்ள விடுதியில் ஆளுநர் தங்கினார்.
11 பேர் கைது
முன்னதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை நியமனம் செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட குழுவினர் நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் விஜயகுமார், உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பாக காங்கிரசார் தமிழ்த்தாயை வணங்கி தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.