செய்திகள்

ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

Spread the love

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில்

ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு :

கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்

 

தஞ்சாவூர், மார்ச்.26-

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டம் தவிர அருகில் உள்ள பல்வேறு மாவட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சுமார் 203 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்து. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரி வரும் நான்கு வழிகளில் இரண்டு வழிகள் மூடப்பட்டுவிட்டது. ஒரு வழியில் பொதுமக்களும் மற்றொரு வழியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் வர அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள அறுவை சிகிச்சைகள் பின்னர் நடைபெறும். மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு வரும் இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளித்த பின் உள்ளே அனுமதிக்கப்படுகிது. பஸ்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 203 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் அனைத்து அறைகளும் 4 மணி நேரத்திற்கு ஒரு தடவை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. கல்லூரி வளாகத்தை மரம், செடி கொடிகள், கட்டடங்கள் மேல் பகுதி ஆகியவற்றை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த குட்டி விமானம் மூலம் 5 நிமிடத்திற்கு 8 கிலோமீட்டர் பரப்பளவு கிருமிநாசினி தெளிக்கப்படும். இந்தக் ஆளில்லா குட்டி விமானத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் கார்த்திகேயன், சசிதரன், பிரதீப் ஆகியோர் தயாரித்துள்ளனர். அவர்களது பணி பாராட்டுதற்குரியது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இதுவரை 26 பேர் கொரோனா நோய் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ரத்த பரிசோதனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 12 பேருக்கு கொரோனா நோய் இல்லை என்று முடிவு தெரிந்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 700 நோயாளிகள் வந்தாலும் அதற்கான வசதிகள் இந்த மருத்துவமனையில் உள்ளது. மருத்துவ கல்லூரிக்கு வரும் அனைவரும் நுழைவாயில் அருகில் உள்ள குழாயில் கைகளை தண்ணீரில் கழுவிய பிறகு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறாார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தஞ்சை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரிஸ்,மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *