சினிமா செய்திகள்

கலங்கரை விளக்கம் – காவியமானவன் கமல்!

‘‘கால நதியில் கரையாதவன் ;

எந்தக் காற்றுக்கும்

மழைக்கும் அசையாதவன்;

நீலவானம் போல்

விரிவானவன் ;

எந்த நிலையிலும்

தன் வழி மாறாதவன்….!’’

கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் தான் சட்டென்று நினைவுக்கு வரும் – மீண்டும் ‘ஆளவந்தானோடு’ களம் இறங்கும் எஸ்.தாணுவையும், கமலையும் பார்க்கும்போது.

கலைப்புலி எஸ். தாணு

2K Kids, 2K Kids என்று பேச்சு வழக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே அந்த 2K Kids (2000ம் ஆண்டிலும், பின்னாலும் பிறந்தவர்கள்) அவசியம் பார்க்க வேண்டியதோர் படம்: கலைப்புலி எஸ். தாணுவின் ‘ஆளவந்தான்’.

அதிலும் குறிப்பாக விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் – விஷுவல் மீடியா பட்டம் பெற்றிருக்கும் இளைஞர்களும், பட்ட வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும், ஃபிலிம் இன்ஸ்டிடூட் நடிப்புப் பயிற்சி மாணவர்களும் (அவசியம்…)

காரணம் – 23 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்தியை எப்படி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி – இருக்கையின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார்கள் – கமலும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் என்பதை நினைக்கும் போது,

கமல் விஷயத்தில் கண்கள் அகல விரியும். என்னமாய் ஒரு கலைஞன். எப்படி ஒரு தொலைநோக்குப் பார்வை? ஹாலிவுட் பாணியில் படைப்புக்கு முயற்சி… என்பதை நினைக்கும்போது –

மூவர் விஷயத்தில் கலைப்புலி எஸ்.தாணுவையும் சேர்த்து, ‘தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்த நில்லடா…’ வரிகள், செவிகளில் உரக்கவே ஒலிக்கும்.

சித்தியின் (மாற்றான் தாய்) கொடுமை எதிரொலி – பெண் என்றாலே வெறுப்பு. அதுவும் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மூத்தவன், இளையவன் இருவருக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சி – எரிமலைப் போராட்டம் : ‘ஆளவந்தான்’ திரைக்கதை.

‘தாயம்’ என்ற பெயரில் கமல் எழுதிய நாவல். அதற்கு திரைக்கதை வடிவம் கொடுக்கச் சொல்லி – வசனம் – நடிப்பு – இணை இயக்கம் – நடிப்பு என்று நான்கிலும் ஒப்பந்தம் செய்தவர் எஸ்.தாணு. (2000ம் ஆண்டில்).

ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ‘ஆளவந்தான்’ பிரம்மாண்ட அறிமுக விழா, அன்று ஊரும் பேசியது, உலகமும் (தென்னகப் படஉலகம்) பேசியது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘ஆளவந்தான்’ அன்று ஓடியதோ திரையில் 3 மணி நேரம். அதில் 55 நிமிடத்தை வெட்டிக் குறைத்து 2 மணி 3 நிமிடத்துக்கு மறு திரையீடு.

இரு கோடுகள் தத்துவம் தான். விஜய் என்னும் கமாண்டோ கோட்டுக்குப் பக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நந்து கோட்டைப் போட்டால் – விஜய் சிறிதாகி விடும். அது போலத்தான், ‘ஆளவந்தான்’ ஆழமாய் உள்மனதில் உறைந்து விடுவான். கமாண்டோவைக் கடுகளவாக்கி விடுவான்.

மூக்கை உறிஞ்சி – தோள் பட்டையைக் குலுக்கி – மொட்டைத் தலையை இப்படியும் அப்படியும் அசைத்து, கண்களை உருட்டி ‘மிருகவெறி’யில் நடை நடந்து – எகிறிக் குதித்து சிறைச் சாலையில் தன்னைப் பார்க்க வந்திருக்கும் தம்பி (விஜய்) கமலின் காதலியைப் (ரவிணா டாண்டன்) பார்த்ததும்…

கோபாவேசத்தில் ‘பெண்கள் சிவந்தி, ஆண்கள் பூச்சி…’ என்று கிண்டல் பேச்சில் ஆரம்பிக்கும் அந்த அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து…

வரிசை வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கியாஸ் சிலிண்டர் பக்கத்தில் நின்று தீக்குச்சியைக் கொளுத்தி வீசி, சிலிண்டர்கள் டாமல்.. டமால்… என்று வெடித்துச் சிதறி, தீ ஜ்வாலை நடுவில் தானும் கொழுந்து விட்டெரிந்து மரிக்கும் க்ளைமாக்ஸ் வரை…

நந்து – கமல், ஆளவந்தான் – தமிழை, அடுத்து தென்னிந்தியாவை, அதற்கடுத்து… பூமிப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம், இதயத்தை ஊடுருவி ஆளவந்தான்! இப்படியொரு நடிகன் ஜனித்திருப்பது தமிழக மண்ணுக்கேப் பெருமை. கலங்கரை விளக்கம் – காவியமானவன்.

‘மிருகம் பாதி …. மனிதன் பாதி… இரண்டும் சேர்த்துக் கலவை நான்’ – பாடல் வரிகள், அன்று ஒலிக்காத இடமில்லை. பாட்டுக்கான ஆட்டத்தில், நடிப்பில்… கமல், அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் (மிருக) வெறித்தனமான பார்வை. பிறவிக் கலைஞனே, கமல்!

(ஆப்பிரிக்க காட்டுப்புலி … மனீஷா கொய்ராலாவோடு முழங்கால் நீரில் குதியாட்ட டான்ஸ்… இளசுகளுக்கு ‘கிக்’ ஆட்டம், பாட்டம் : கிறுகிறுக்கும் கிராபிக்ஸ் – கலக்கலும் தான்!)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – பிணைக் கைதிகளாக அப்பாவிகள் சிறை பிடிப்பு – மீட்க விரையும் கமாண்டோக்களின் (கமல் தலைமையில் படாலியன்) அதிரடி சாகச தாக்குதலோடு ‘ஆளவந்தான்’ ஆரம்பம்.

துவக்கமே ஒரு க்ளைமாக்ஸ் மாதிரி, பொறி பறக்கும். (23 ஆண்டுகளைக் கடந்தும் வற்றாத நதி போல காஷ்மீரில் தீவிரவாதம்… பாருங்கள் இன்னும் அதே நிலைமையை…?!)

‘கோல்ட் வின்னர்’ விளம்பர ராட்சத பலூனில் தலைகுப்புற விழுந்து, அதன், கயிற்றைப் பிடித்து தொங்கி பல மாடி கட்டிடத்துக்குத் தாவி… க்ளைமாக்சில் கமல் விஜய்யும், கமல் நந்துவும் மோதும் – நரம்புகளை முறுக்கேற்றும் அதிரடி ஆக்ஷ்ன் ஸ்டண்ட் : திரையில் வைத்த கண் வெறிக்க திரையையேப் பார்த்தபடி. (விக்ரம் – தர்மா ஸ்டண்ட் இயக்குனர். இவர் கமலின் கண்டெடுப்பு, ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்.)

சிரி… சிரி… சிரி… காமெடி பாடல். ‘‘மூக்கும் முழியுமா ஒரு பொண்ணை அம்மா கேட்டா, ஆனா… நா வாயும் வயிறுமா ஒரு பொண்ணை…’’ கமல் ஜோக் அடித்தபடி பாடும் பாடல் – நந்துவின் உக்ரப் பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி நிற்க. (நிவாரணத்துக்கு… நிம்மதிக்கு)

சங்கர் – எஸான் – லாய் : தமிழில் இசைக்கு அறிமுகம். மூவரின் சங்கமம். ஒளிப்பதிவு : திரு. பாடல்கள், வசனகவிதை : வைரமுத்து. வசன நடை கவிதை கமலின் உச்சரிப்பில், அது ஒரு தனி அழகு. ஆராதிக்கலாம்.

‘இது மாதிரி செலவு செய்ய பிரம்மாண்டம்… அது கலைப்புலி எஸ். தாணு மட்டுமில்லாமல் தான். அவருக்கு நானும் ஒரு படம் பண்ணனும் அந்த பிரம்மாண்டத்துக்காகவே…?’’ என்று ஒரு திரைப்பட விழாவில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரையே பெருமையாய்ப் பேச வைத்தவர் கலைப்புலி எஸ்.தாணு (மறக்க முடியுமா, அந்த எழுச்சி உரையை, காலங்கள் கரைந்தாலும்…). அந்த பிரம்மாண்டம் ஆப்பிரிக்கக் காட்டுப் புலியிலும், ஆரம்ப காஷ்மீர் தீவிரவாதக் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் தெரிகிறதே. தண்ணீராய் பணம் செலவழிப்பு…

படுக்கை அறையில் ரவீணாவுடன் கமலின் நெருக்கக் காட்சி வசனம்… அன்றைய நாட்களில் முகஞ்சுளிக்கும். ஆனால் இன்றோ… காலம் மாறிப் போச்சே(ா)?! கமலோடு – கமல் மோதும் – ஆக்ஷ்ன் த்ரில்லர். ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியீடு.

பகலவனுக்கு அடியில் எல்லாமே சாத்தியம் என்பதில் அசைக்க முடியாத இரு வல்லவர்கள் கமலும், எஸ். தாணுவும்.

23 ஆண்டுகள் கடந்தும் இன்னும் இந்தத் திரையில் 1990 – 2000ல் இருந்த அதே வெறியில், நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, கமலும், எஸ். தாணுவும் : என்ன உணர முடிகிறது, இதிலிருந்து? இருவருமே கலைப்புலிகள்!

‘ஆளவந்தான்’– கமல், எஸ்.தாணு:

நடந்தார், நடந்தார், நம்பிக்கையோடு

நல்லதை நினைத்தே நடக்கின்றார்!

கடந்தார், கடந்தார் கடமையை

எண்ணிக் கல்லையும்,

முள்ளையும் கடக்கின்றார்.

எத்தனை காலம், எத்தனைப் பாடம்

இன்னமும் தொடர்ந்தே படிக்கின்றார்,

எத்தனை கற்கள்

இடறி விட்டாலும் எழுந்தார்,

துணிந்தார், துணிந்தே

நடக்கின்றார்!


– வீ.ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *