சிறுகதை

ஆலமரம் | டாக்டர் கரூர் அ. செல்வராஜ்

உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதமான தொழில் விவசாயம். அந்தத் தொழிலைத் தன் உயிரிலும் மேலாக மதித்துச் செய்து வந்தார் விவசாயி ராமசாமி. அவரது தொழிலுக்கு ஊக்கமும் உதவியும் செய்து வந்தார் அவரது மனைவி அன்பு. தம்பதியர் இவர்களுக்குப் பிறந்தது 2 மகன்கள். மூத்தவன் அசோக், என்ஜினீயர். இளையவன் அருண் தனியார் வங்கியில் கிளார்க்.

விவசாயி ராமசாமி தன் 2 மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்து வேலையில் அமர்த்தி நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார். உரிய காலத்தில் தாத்தா என்ற நிலைக்கும் உயர்ந்தார். வயது முதிர்வு காரணமாக முன்புபோல விவசாயத்தில் முழுமையான வேகத்தோடு வேலை செய்ய முடியாததால் அவ்வப்போது விவசாய வேலைக்கு ஆட்களை வைத்து சமாளித்து வந்தார்.

விடுமுறையில் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்த அசோக் இரவு உணவுக்குப் பிறகு தன் அப்பா ராமசாமியுடன் பேச்சை ஆரம்பித்தான்.

‘அப்பா!’

‘சொல்லுப்பா அசோக்’

‘அப்பா, உங்களுக்கு 65 வயசு ஆச்சு. அம்மாவுக்கு 62 வயது ஆச்சு. இப்ப, நீங்க 2 பேரும் தாத்தா – பாட்டி ஆகிட்டீங்க. இந்த வயசுலே பேரக் குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்படணும் அவங்களோடு கொஞ்சி விளையாடணும். அது மட்டுமில்லே, நேரம் தவறாமல் சத்தான சாப்பாடு சாப்பிட்டுட்டு நல்லா ஓய்வு எடுக்கணும். இதெல்லாம் சரியா நடக்கணுமின்னா நீங்க 2 பேரும் நம்ம விவாசய நிலங்களை வித்துட்டு எங்களோடு வந்து வீட்ல தங்கணும். இதை நீங்க செய்யணும்’ என்றான் அசாக்.

மகன் அசோக்கின் பேச்சு தான் எதிர்பார்த்தது தான் என்பதை அறிந்து கொண்ட ராமசாமி ,

‘‘அசோக் கண்ணு! நீ என் மகன். உன் ஆசையைச் சொல்லிட்டே. நான் என் ஆசையைக் சொல்றேன் கேளு. ஒரு மகனிடம் ஒரு அப்பா எதிர்பார்க்கிற அன்பும் ஆதரவும் அயராத பணிவிடையும் மருமகள்கிட்ட கிடைக்காது. அதை எதிர்பார்க்கவும் கூடாது. ஒரு மகனின் உறவுங்கிறது அவனுடைய மனைவி வந்த பிறகு படிப்படியாக மாற ஆரம்பிச்சு ஒரு கட்டத்துலே உறவு நிலையே சங்கிலி அறுந்த மாதிரி அறுந்து விழுந்திடும். ஆனா ஒரு மகள் உறவுங்கிறது அவளைப் பெத்த அப்பாவுக்கு ஆயுள் முழுவதும் உதவி செய்யற ஆலமரத்து விழுது மாதிரி. எனக்கு ஒரு மகள் பிறக்கலையே அப்படீங்கிற தீராத கவலை மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருக்குதுப்பா. உன்னையும் உன் குடும்பத்தையும் தொந்தரவு செய்ய எனக்கு விருப்பமில்லே’ என்றார் ராமசாமி.

அப்பாவின் பிடிவாத குணம் மாறாது, மாற்ற முடியாதது என்பதை அறிந்திருந்த அசோக் தனது மன விருப்பம் நிறைவேற மீண்டும் ஒரு முறை அப்பாவிடம் பேசினான்.

‘அப்பா!’

‘சொல்லுப்பா அசோக்’

‘இது தான் உங்க முடிவா…?’

‘ஆமாம்பா’

‘அப்பா! நீங்க மாறவே மாட்டீங்களா?’

‘ஏம்பா, இப்படி பண்ணுறீங்க?’

‘அசோக்! எனக்கும் உங்க அம்மாவுக்கும் வயசு ஆயிருச்சு. முதியோர்கள் ஆகிட்டோம். அதையும் மறுக்கலே. விவசாய நிலத்தை குத்தகைக்கு விடறதுக்கு முடிவு பண்ணிட்டேன். அந்தப் பணத்தை வச்சுகிட்டு மீதி இருக்கிற காலத்தை சந்தோஷமா வாழறதுன்னு திடமான முடிவையும் எடுத்துட்டேன். என்னுடைய இந்த முடிவுக்கு உங்க அம்மாவும் சம்மதிச்சுட்டா. எங்க காலத்துக்குப் பிறகு விவசாய நிலங்களை மீட்டெடுத்து வித்து நீயும் உன் தம்பி அருணும் சமமாப் பணத்தைப் பங்கு பிரிச்சுக்குங்க. உன் தாயும் தகப்பனும் சேர்ந்து உருவாக்கின குடும்பம் ஓர் ஆலமரம். அந்த மரத்திலே தோன்றிய விழுதுகள் தான் நீயும் உன் தம்பியும். ஆலமரத்துக்குத் தாங்குதல் தரவேண்டிய பொறுப்பு விழுதுகளுக்கு இருக்குது. அதை நீங்க செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்களைப் பத்தி எதுவும் நாங்கள் குறை சொல்லவே போறதில்லை. ஒரு ஆலமரம் தன் விழுதுகளிடம் விரோதம் காட்டாது என்பதை மட்டும் புரிந்துகொண்டு நடந்துக்குங்க. பெத்த பிள்ளைகளுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்து என்றென்றும் உண்டு’ என்றார் ராமசாமி.

அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் மவுனம் காத்தான் அசோக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *