சிறுகதை

ஆறுவது சினம் | துரை.சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் –2

ஆறுவது சினம்

(விளக்கம்: கோபம் தணியும் தன்மையுடையது)

 

டேவிட்டின் குடும்பம் வசதியான குடும்பம். அவனது தந்தை ராஜாராம் எலக்ட்ரானிக் கடை நடத்தி வரும் தொழில் அதிபர்.

டேவிட் ஒரே மகன் என்பதால் அவனை செல்லமாக வளர்த்தனர்.

டேவிட்டின் நண்பன் மனோகர்.

டேவிட்டும் மனோகரும் சிறுவயது முதல் ஒன்றாக படித்து வருகின்றனர். அவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாக தான் சுற்றுவார்கள்.

மனோகரின் தந்தை வாடகை கார் ஓட்டி வந்தார்.

பிளஸ் –2 முடித்த அவர்கள் இரண்டு பேரும் ஒரே என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தனர்.

கல்லூரிக்கு செல்வதற்காக புதிய பைக் வேண்டும் என்று தனது தந்தையிடம் டேவிட் கேட்டான்.

தனது மகனுக்கு ஒரு சாதாரண பைக் வாங்கி தருவதாக ராஜாராம் கூறினார்.

ஆனால் டேவிட் மறுத்துவிட்டான். தனக்கு ரேஸ் மாடல் பைக் தான் வேண்டும் என்று அடம்பிடித்தான்.

அதை வாங்கிக் கொடுத்தால் டேவிட்டுக்கு நடக்கக் கூடாதது ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்து மறுத்தார்.

டேவிட் கோபக்காரன் என்பதால் தான் விரும்பிய பைக் தான் வேண்டும் என்று அடம்பிடித்து சண்டை போட்டான்.

அதைத் தொடர்ந்து அவன் விரும்பிய மாடல் பைக்கை வாங்கிக் கொடுத்தார் ராஜாராம்.

டேவிட்டும் மனோகரும் தினமும் அந்த பைக்கில் ஒன்றாக கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

டேவிட் வண்டி ஓண்டினால் வண்டியின் சக்கரம் தரையில் படாமல் பறக்கும். அந்த அளவுக்கு இளமை துடிப்பில் வண்டி ஓட்டுவான்.

அன்று காலை வழக்கம் போல் தனது நண்பன் மனோகரனை வண்டியில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த டேவிட் ஒரு திருப்பத்தில் டேவிட் வண்டியை திருப்பினான்.

அப்போது அந்த வழியாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருணாகரன் எதிர்பாராத விதமாக டேவிட்டின் மோட்டார் சைக்கிள் எதிரில் புகுந்துவிட்டார்.

தனது மோட்டார் சைக்கிளின் எதிரே முதியவர் ஒருவர் திடீரென புகுந்ததை பார்த்து திடுக்கிட்ட டேவிட், அவர்மீது மோதாமல் இருக்க பிரேக்கை அழுத்தி பிடித்தான்.

அவன் வேகமாக வந்ததால் வண்டி அவன் கட்டுக்குள் வராமல் கருணாகரன் வண்டியின் மீது மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு வண்டிகளும் பலத்த சேதமடைந்தன.

விபத்துக்கு தானே காரணம் என்பதால் கருணாகரன், ‘‘சாரி தம்பி…. சாரி… ஏதோ கவனம் இல்லாமல் வந்துட்டேன்’’ என்றார்.

தான் ஆசையாய் வாங்கி வண்டி சேதமடைந்ததை பார்த்ததும் டேவிட்டுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

உடனே முதியவர் கருணாகரனை பார்த்து, ‘‘என்ன பெரிசு… வீட்டில் சொல்லிட்டு வந்துட்டியா…. உனக்கு வேற வண்டி கிடைக்கலையா…. என் வண்டி தான் கிடைச்சதா…’’ என்று ஒருமையில் திட்டத் தொடங்கினான்.

அவனுடன் சேர்ந்துக் கொண்டு மனோகரும் பெரியவர் கருணாகரனை திட்டினான்.

தன் மீது தவறு என்பதால் பொறுமையாக இருந்த கருணாகரன் சின்ன பசங்க ஒருமையில் பேசியதால் அவருக்கும் கோபம் வந்தது.

கோபத்தை கட்டுப்படுத்தி பொருமையாக தம்பி நான் செய்தது தவறு தான்… அதுக்கு தான் சாரி சொல்லிட்டேன்…. உன் வண்டிக்கு என்ன செலவு ஆகுமோ… அதை நானே கொடுத்திடுறேன்… கொஞ்சம் மரியாதையா பேசுங்க.

நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். என் வயசுக்கும் என் வேலைக்கும் கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்று அமைதியாக பேசினார் கருணாகரன்.

ஆனால் டேவிட்டும் கருணாகரனும் அவர் பேசியதை காதில் வாங்காமல் மேலும் மேலும் ஒருமையிலேயே அவரை திட்டிக் கொண்டு இருந்தனர்.

கருணாகரன் பொறுமையாக இருந்து, டேவிட்டை சாமதானப் படுத்தி பார்த்தார்.

அவர்கள் கேட்பதாக இல்லை.

இதைப் பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அங்கு கூடிவிட்டனர்.

ஒரு வயதானவரை இளைஞர்கள் திட்டுவதை பார்த்து அவர்களுக்கு மனசு தாங்கவில்லை.

உடனே டேவிட்டையும் மனோகரையும் அங்கிருந்தவர்கள் கண்டிக்கத் தொடங்கினர்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் போலீசுக்கு போன் செய்றேன். போலீஸ் வந்து பார்த்துகிடட்டும் என்று கூறினான்.

அனைவரும் ஒன்று திரண்டு பேசத் தொடங்கியதும் டேவிட்டும் மனோகரும் அமைதியானார்கள்.

போலீசை கூப்பிடுகிறேன் என்று ஒருவர் சொன்னதை கேட்டதும் டேவிட் கோபத்தை குறைத்துக் கொண்டான்.

ஏனென்றால் டேவிட்டிடம் வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸ் கிடையாது.

போலீஸ்காரர் வந்தால் முதலில் லைசென்சைதான் கேட்பான். அதனால் டேவிட் தனது கோபத்தைக் குறைத்துக் கொண்டான்.

உடனே கருணாகரன், அங்கிருந்தவர்களிடம் விடுங்க சார்… சின்ன பசங்க கோபத்தில் பேசுறாங்க என்று பெருந்தன்மையுடன் கூறினார்.

தம்பிகளா உங்களுக்கு கோபம் வருவது நியாயம் தான். ஆனால் அதற்காக வயது வித்தயாசம் பார்க்காமப் பேசக்கூடாது. கோபத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். கோபம் கட்டுப்படுத்தக் கூடியது தான். கோபத்தில் பேசுவதால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.

தெரியாமல் நடந்த தவறு… நான் உங்களது வண்டியை சரி செய்யும் முழு செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கருணாகரன் மீண்டும் கூறினார்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், தம்பி அவர் தான் முழு செலவையும் ஏற்றுக் கொள்கிறாரே… அமைதியா போங்க என்று கூறினார்.

டேவிட்டின் கோபம் கட்டுக்குள் வந்தது.

அதைத் தொடர்ந்து கருணாகரன், டேவிட்டையும் மனோகரையும் அழைத்து வண்டியை மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று அதை சரி செய்வதற்கான முழு தொகையும் செலுத்தினார்.

மீண்டும் பழைய நிலைக்கு தனது வண்டி வந்துவிட்டதை பார்த்து டேவிட் மகிழ்ச்சி அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *