சந்திரன் பத்து நாட்கள் விடுமுறையில் சென்னை வந்திருந்தார். சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் வந்தவர் கணக்குப் போட்டு செலவழிப்பவராதலால் ஒவ்வொரு இடம் செல்லும் போதும் எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு மேற்கொண்டு அதிகப்படியாக பணம் கொண்டு செல்ல மாட்டார்.
அவர் செல்லும் சொந்தக்காரர் வீடுகளில் எல்லாம் கணக்குச் சந்திரன் மாமா என்றே கேலி செய்வார்கள். அவர் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மாட்டார். பயணம் செல்வதற்கு முன் எப்படி செல்லப் போகிறோம். எங்கெங்கே செல்லப் போகிறோம் என்று செல்லப் போகிறோம் என்ற அட்டவணைப்படி தான் செல்வார். சிறு மாற்றம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். கூடிய மட்டும் இரவுப் பயணங்களைத் தவிர்ப்பார். பகலில் பேருந்து பயணம் செய்வதில் அவருக்கு அலாதிப் பிரியம். புகை வண்டிப் பயணச் சீட்டு தயாராக இருந்தால் மட்டுமே இரவுப் பயணம் மேற்கொள்ளுவார். மற்றபடி அவர் மேற்கொள்ளும் எல்லாப் பயணமும் பேருந்துக்கள் மூலம் தான்.
இவருக்கு தனது ஊரிலிருந்து கிளம்பும் மற்றும் சென்னையிலிருந்து கிளம்பும் ஆம்னி பேருந்து நடத்துபவர்கள் நன்கு அறிமுகம் ஆனதால், கைப்பேசியில் அவர்களுடன் பேசி இருக்கையை உறுதிப் படுத்திக் கொள்வார். இவர் பயணம் பகல் நேரம் மற்றும் சாதாரண நாள் என்பதால் இருக்கை பிரச்சனை இவருக்கு ஏற்படாது.
சந்திரன் செல்லும் உறவுக்காரர் வீடுகளில் உள்ளவர்களிடம் மிகவும் கனிவாகப் பேசி அவர்களைக் கவர்ந்து விடுவார். ஒரு வீட்டிலிருந்து மற்றவர் வீடு செல்லும் போது இவரை யாராவது ஒருவர் வாகனத்தில் கூட்டிச் சென்று விடுவார்கள். இதனால் போக்குவரத்துப் பிரச்சனை இவருக்கு ஏற்படாது. இவர் ஊரிலிருந்து கிளம்பும் போது சில தின்பண்டங்கள் மற்றும் சில பொருட்கள் கொணர்ந்து போகின்ற வீடுகளுக்குத் தந்து மகிழ்வார்.
பழைய நகைச்சுவைகள், பழைய சினிமாவில் வரும் காட்சிகள், பழைய கிராமிய பாட்டுக்கள், நீதிக் கதைகள் மற்றும் வாழ்வில் முன்னேற வழிகள் என்றுகூறி இவர் இருக்கும் நாட்களில் பிள்ளைகளை தொலைகாட்சி மற்றும் கைப்பேசியை மறக்க வைத்து விடுவார்.
கணித சம்பந்தமான விடுகதைகள் போட்டு கேட்பவரை திக்கு முக்காடுச் செய்து விடுவார். நட்பின் இலக்கணம் பற்றி பழைய நீதி நூல்கள், திருக்குறள் போன்ற நூல்களில் உள்ளதை மேற்கோள் காட்டி பிரமிக்கச் செய்வார்.
பழைய அழிந்து வரும் விளையாட்டுக்களை நினைவு கூர்ந்து அது நமது மூளைக்கு சக்தியைக் கொடுப்பதாகக் கூறுவார். சில பிள்ளைகள் அவரிடம் எப்படி இதெல்லாம் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அவருக்கு சொல்லிக் கொடுத்தவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்து கூறுவார். இப்படி கணக்குப் புதிர் போடுவதால் உங்களுக்கு கணக்கு சந்திரன் மாமா என்கின்றார்களோ என்றால் பணத்தை கணக்குப் பார்த்து செலவலிப்பதால் என்று உண்மையைக் கூறுவார்.
இவர் ஒரு வீட்டை விட்டு செல்லும் போது அங்குள்ள பிள்ளைகள் முகத்தில் வருத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றானது. கிளம்பும் நாளன்று சந்திரனுக்கு பிள்ளைகளின் முகத்தில் தோன்றிய ஆனந்த அலைகள் அவர் கண் முன் வந்து வந்து போனது. அவருக்கும் இருக்க முடியாத சூழ்நிலை. ஏனெனில் ஊரில் இவரது வியாபாரத்தை ரொம்ப நாள் தனது மாப்பிள்ளையை பார்க்கச் சொல்லி நாம் ஊர் சுற்றுவது நல்லதல்ல என்ற எண்ணம் வந்து புறப்படத் தயாரானார்.
எப்போதும் போல் அன்று கோயம்பேட்டுக்கு வந்த சந்திரன் ஆம்னி பேருந்தை தொடர்பு கொண்ட போது கிளாம்பாக்கம் வாருங்கள் என்று பேருந்து நிற்கும் இடத்தை அடையாளம் சொன்னார்கள்.
மேலும் கோயம்பேட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன என்று கூறினார்கள்.
சந்திரன் சற்று யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கிளாம்பாக்கம் செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்றார். சில பேருந்துகள் அங்கு நின்று கொண்டிருந்தன. எப்போது பேருந்து கிளம்பும் என்று கேட்டால் ஏறுங்கள் என்றனர். இந்த சமயத்தில் கைப் பேசியில் அழைப்பு வர, சந்திரன் பேச, எதிர் முனையில் ஐயா சீக்கிரம் வாருங்கள் பேருந்து கிளம்பி விடும் என்றவுடன் சந்திரன் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றார்.
எப்போதும் கணக்குப் பார்க்கும் சந்திரன் ஆட்டோ ஓட்டுனர் கேட்ட தொகையை ஒப்புக் கொண்டு பயணம் மேற்கொண்டார். ஒரு வழியாக கிளாம்பாக்கம் வந்ததும் அவர் அங்கு கட்டுப்பட்டுள்ள பெரிய பேருந்து நிறுத்தங்களைக் கண்டு ஒரு கணம் மகிழ்ந்தார். அதற்குள் மீண்டும் அழைப்பு வரத் தான் ஏற வேண்டிய பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்தில் இருக்கையில் அமர்ந்தார். தான் கட்ட வேண்டிய பணத்தை எண்ணும் போது அதிகப்படி செலவினால் பணம் சற்று குறைவாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த போது அப்போது அங்கு வந்து பணம் வாங்குபவர் ஐயா இன்றுடன் இந்த பேருந்து சேவை 25 ஆண்டுகள் ஆனதால் இன்று மட்டும் பயணச் சீட்டில் பயணிப்போருக்கு 25 சதவீதம் தள்ளுபடி என்றதும் அவர் கேட்ட பணம் சரியாக இருந்ததும் சற்று ஆறுதலான தருணமாக அமைந்தது கணக்குச் சந்திரனுக்கு மறுபடியும் கணக்கில் ஒரு சறுக்கல். நம் கௌரவம் காப்பாற்றப்பட்டது என்று நினைத்த வேளையில் , ஐயா என்ன யோசனை, இந்தாருங்கள் பயண ரசீது மற்றும் இனிப்பு , காரம் மற்றும் தண்ணீர் பாட்டில் என கொடுத்து விட்டுநடந்தவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரன்.
அந்தக் காலத்தில் புகை வண்டிப் பயணம் செல்வதென்றால் சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாகவே வீட்டிலிருந்து கிளம்பி விடுவார்கள். அது தான் எனக்கு ஞாபகம் வருகிறது கிளாம்பாக்கம் செல்லும் போதும் என சந்திரன் நண்பர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் பணமும் கை நிறைய கொண்டு செல்ல வேண்டுமெனக் கூற கணக்குச் சந்திரன் கணக்கு இதில் செல்லாது போல என்று ஒருவர் கூற, சந்திரனே தன்னை மறந்து சிரித்தார்.