செய்திகள்

ஆறுகள் ஒன்றாக இணைவது போலவே மதம் கடந்து மனங்கள் கலக்க வேண்டும்

சென்னை, ஜன. 11–

குருநானக்கின் 550 வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மத நல்லிணக்க விழாவில், இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு ‘துடிப்புமிக்க இந்தியர்’ விருது வழங்கி, அமைச்சர் பாண்டியராஜன், ஆற்காடு இளவரசர், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் வாழ்த்தினர்.

டெவலப்பர்ஸ் இந்தியா சார்பில், குருநானக்கின் 550 வது பிறந்தநாள் விழாவையொட்டி, கிருஸ்துமஸ் விழா, புத்தாண்டு, பொங்கல் விழா ஆகியவை, நேற்று மாலை, ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. விழாவில், டெவலப்பர்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனரும் செயலாளருமான ஹர்பஜன்சிங் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி ஆகியோர், கர்நாடக இசைக்கலைஞர் அருணா சாய்ராமுக்கு டெவலப்பர் இந்தியா சார்பில் ‘துடிப்புமிக்க இந்தியர்’ (Vibrant Indian) விருதை வழங்கியதுடன், டெவலப்பர் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான கையேட்டை வெளியிட்டு வாழ்த்தினர்.

மனங்கள் இணைய வேண்டும்

விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:–

உலகம் முழுக்க தீவிரவாதங்கள் தலை தூக்கியுள்ள வேளையில், இதுபோன்ற மத நல்லிணக்க விழா நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்காலத்தில் மத நம்பிக்கையற்ற இளைஞர்கள் பெருகி வருகிறார்கள். உலகில் உள்ள 720 கோடி மக்கள் தொகையில், சற்றொப்ப 250 கோடி பேர் கிருத்துவர்களாகவும், அதனைத்தொடர்ந்து சுமார் 210 கோடி பேர் இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். மூன்றாவது நிலையில் கடவுள் நம்பிக்கையற்ற அல்லது மதமற்ற மக்கள் 100 கோடிக்கு மேல் உள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.

உலகம் முழுக்க வேறுபட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதனை களைய வேண்டுமானால், 5 முக்கிய நெறிகளை கடைபிடிக்க வேண்டும். ஒற்றுமையாய் இருத்தல், கருத்துகளை பகிர்ந்துகொள்ளுதல், மாற்று கருத்தின் சிறப்புகளை பெற்றுக் கொள்வது, மற்றவர்களை வேறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்வது மற்றும் மாற்று சிறப்புகளை பாராட்டுவது என்ற நெறிகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். நம்பிக்கை என்பது அர்த்தமற்றதாக இல்லாமல், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடந்தால் சமூகம் சிறப்பாக இருக்கும்.

குழந்தையின் மனதுபோல், நமது மனம் வெற்றுக் காகிதமாய் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் எழுதமுடியும். அப்படியான ஒரு சமூகம் மலர வேண்டும். குருநானக்கின் 550 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் வேளையில், டெவலப்பர்ஸ் இந்தியாவின் இந்த மத நல்லிணக்க விழா சமூக ஒற்றுமையை வளர்க்க உதவும். ஆறுகள் ஒரே இடத்தில் கலப்பதுபோல், மதங்கள் கடந்து, மனித மனங்கள் ஒன்றாக இணைவதே மனித சமூகம் மேம்பட உதவும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இசைக் கலைஞர் அருணா சாய்ராம், ‘துடிப்பு மிக்க இந்தியர்’ விருதுக்கு மிகச்சிறந்த தேர்வு என்று வாழ்த்தினார்.

மதம் தனிப்பட்ட நம்பிக்கை

விழாவில், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி பேசியதாவது:–

இந்த விழா, இந்து, முஸ்லிம், சீக்கியர், கிருஸ்தவர் எல்லோரும் சகோதரத்துவத்துடன் வாழ, வலியுறுத்தும் விழா. அதற்கு எடுத்துக்காட்டாக, மேடையில் தலைவர்கள் உள்ளனர். உலகில் அமைதியும், சகோதரத்துவமும் இல்லை என்றால் நிம்மதி இருக்காது. இந்த நாடு, அனைத்து மக்களுக்குமான, மதச்சார்பற்ற நாடாக விளங்குகிறது. இந்தியா, ஏராளமான மதங்கள், கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள் கொண்டது. எனவே, மதம் அரசியலில் கலக்கக் கூடாது. அப்போதுதான் சிறந்த நாடாக இருக்க முடியும்.

நம்மிடையே உள்ள குழு மனப்பான்மை, காந்தியாரின் கொள்கைகளுக்கு எதிரானது. வேற்றுமையில் ஒன்றுமையே இந்த நாட்டின் பலம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்பது தனிப்பட்ட மனித நம்பிக்கை. அதனை வீட்டுக்குள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு நாம் வெளியே வந்தால், நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும் என்று கூறினார்.

நல்லிணக்கத்துக்கு உதவும்

நல்லி குப்புசாமி செட்டி பேசும்போது கூறியதாவது:–

சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடும் இந்த அமைப்பின் சார்பில், இன்று அருணா சாய்ராம் அவர்களுக்கு துடிப்பு மிக்க இந்தியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை நானும் ஒருமுறை பெற்றுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி. இந்த விழா, மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அதற்கு முன் உதாரணமாக உள்ளது. மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஆற்காடு இளவரசரின் முன்னோர்கள் நிலம் வழங்கினர். அதனால்தான் முகரம் பண்டிகையின் போது, 3 நாள் இஸ்லாமியர் விழா அங்கு நடைபெறுகிறது. அதேபோல், திருவல்லிக்கேணி திருவொற்றீசுவரர் கோயிலுக்கும் நிலம் வழங்கி உள்ளனர். இவை எல்லாம் கோயில் ஆவணப் பதிவுகளில் உள்ளது. கிருஸ்தவர்கள் தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்துள்ளனர். எனவே, சமூக நல்லிணக்கத்துக்கு, இது போன்ற விழாக்கள் பயன்படும் என்றார்.

சமூக நீதிக்கு பாடுபட்டவர்

தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஐஏஎஸ் கூறியதாவது:–

மத நல்லிணக்கத்துக்காக இந்த விழா நடத்தப்படுகிறது. 550 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் குருநானக், கவிஞராக, அறிஞராக, பகுத்தறிவுவாதியாக, அறிவியல் மனப்பான்மையாளராக பல்வேறு தனித்தன்மைகளுடன் விளங்கினார். இந்த பேராண்டம் ஒலியால் உருவானது என்று அப்போதே எடுத்துக்கூறிய அறிவியலாளராக இருந்தார். அர்த்தமற்ற சடங்குகளை கண்டித்த பகுத்தறிவுவாதியாகவும் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் 4 முறை உலக பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகள் அளவுக்கு பல்வேறு இடங்களை வலம் வந்தார். கடவுள் ஒரு இடத்தில் இல்லை. அவர் அனைத்து திசையிலும் 360 டிகிரியிலும் உள்ளார் என்றார். அமைதி, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக பாடுபட்டவராக குருநானக் விளங்கினார் என்று கூறினார்.

மொழிகள் அடையாளம்

விழாவில் வர்கீஸ் ரோசாரியோ பேசும்போது,

மொழிகள் பண்பாட்டின் அடையாளமாக உள்ளது. அதனை வளப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இங்கு விதைப் பந்துகளாக இருக்கிறோம். அதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதனால்தான் கஜா, ஒக்கி போன்ற புயல்களை, நம்மால் மிக எளிதாக எதிர்கொள்ள முடிந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

நிறைவாக அருணா சாய்ராம் தனது ஏற்புரையில், நாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, மாற்றுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும் என்று கூறினார்.

விழாவில், ரஷ்ய மையத்தின் இயக்குநர் கென்னடி ஏ. ராகலேவ், டெவலப்பர்ஸ் இந்தியா அமைப்பின் தலைவர் சம்பா தேவி கெம்கா, பொருளாளர் சபேசன், மூத்த வழக்கறிஞர் காந்தி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *