சிறுகதை

ஆறாவது புல்லட் | மும்பை கே. அசோகன்

“ஐயா, நான் நிரபராதி என்னைய விட்டுடங்க. என் மகளை அநாதையாக்கிடாதீங்க” காலைப்பிடித்து கதறினான் ராக்கப்பன்.

கதறிய ராக்கப்பனை தரதரவென இழுத்து லாக்கப்புக்குள் தள்ளி கதவைப் பூட்டினார் இன்ஸ்பெக்டர் ராமரத்தினம்.

தனது மேஜையில் அமர்ந்து நிதானமாக யோசித்து…யோசித்து ராக்கப்பன் வெளியே வராதவாறு வழக்கினை பக்காவாகப் பதிவு செய்தார்.

பின்பு

“ஹலோ…, ஐயா, நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. அந்த ராஸ்கல் மேல எப்.ஐ.ஆர் போட்டாச்சு. வெளியே வரவேமுடியாது. யாரிடமோ அலைபேசியில் பேசியதை லாக்கப்பில் உள்ளே இருந்து கேட்ட ராக்கப்பனின் முகம் பயத்தால் வெளிறியது.

அந்த பயத்திலேயே தூங்காமல் விடிய விடிய விழித்து கொண்டிருந்தான். அவன் கண்முன்னால் ராக்கப்பனின் மகளின் முகம் வந்து கொண்டே இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. மறுநாள் லாக்கப் கதவு திறக்கப்பட்டது. வேனில் ஏற்றினார்கள். காலை பதினோரு மணி… கோர்ட்டு குற்றவாளி கூண்டில் ராக்கப்பன் நின்று கொண்டிருந்தான்.

கோர்ட் நடைமுறைப்படி ”நான் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை ’’என்று சத்திய பிரமாணம் வாங்கினார்கள்.

ராக்கப்பனை பார்த்து உனக்காக வாதாட வக்கீல் இருக்கிறாரா? என்று கேட்டார் நீதிபதி .

”ஐயா! நானோ பரமஏழை. வக்கீல் இல்லீங்க .” என்றான்.

“ஐயா…., நான் நிரபராதி.., யாரோ செய்த கொலையை நான் செய்ததா பழிசுமத்தி ஒங்க முன்னால நிறுத்தியிருக்காரு இன்ஸ்பெக்டர்” கதறினான் ராக்கப்பன்.

அரசு தரப்பு வக்கீலும் குறுக்கு விசாரணை செய்தார். மடக்கி மடக்கி கேள்வி கேட்டு துளைத்தார்.

இறுதியில் ” இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தலை வணங்கி விட்டு தன் இருக்கையில் அமர்ந்து விட்டார் .

ஆனால் ராக்கப்பனுக்கு அன்றைய நிலையில் சாட்சிகள் அவனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.

எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி, ”சாட்சிகளின் குறுக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் ’’என்றும் வழக்கினை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாகவும் அறிவித்தார்.

இன்ஸ்பெக்டருக்கு முகம் தொங்கி போயிற்று.

”அடச் , சே…, இந்த நீதிபதி தள்ளி வைச்சுட்டாரே ” என்ற கவலையோடு, “ஐயா, கேஸ் ஒரு வாரத்துக்கு தள்ளி வைச்சுட்டாங்க. நீங்க நிம்மதியா தூங்குங்க” நான் பார்த்துக்கறேன்” என்று மறுபடியும் தகவலாக யாருக்கோ சொன்னார் இன்ஸ்பெக்டர் ராமரத்தினம்.

“என்னய்யா…. ஒன்னைய நம்பினா, இப்படி இழுத்தடிக்கிற மாதிரியா கேஸ் பைல் பண்ணுவே” எதிர்முனையில் குரல் கரகரத்தது.

கோர்ட்டிலிருந்து இராக்கப்பனை ஜீப்பில் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். வேகமாக போய்க் கொண்டிருந்த்து ஜீப் .வேகம் குறைந்தாலோ, அல்லது நின்றாலோ தப்பித்து ஓடிவிடலாமா? என்றும் யோசித்தான். அப்படி ஓடினால் தாம்தான் குற்றவாளியென்றும் ஆதனால்தான் தப்பி விட்டான் என்பார்கள். என்ன செய்யலாம்? என்று யோசனையில் ஆழ்ந்தவாறே இருந்தான்.

வேகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஒரு சாலைவளைவில்…..எதிர்பாராமல் ஒரு லாரி குறுக்கிட போலீஸ் ஜீப் டிரைவர் சடாரென பிரேக் போட்டார்.

….. ராக்கப்பன் நிலைதடுமாறி ஜீப்பிற்குள்ளே கீழே விழுந்தான்.

ராக்கப்பன் கீழே விழந்த அதே நேரம்…… இன்ஸ்பெக்டர் ராமரத்தினமும் சரிந்து கீழே விழுந்தார்.

விழுந்த வேகத்தில் அவருடைய இடுப்பிலிருந்த ரிவால்வர் கீழே விழுந்தது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாரானான் ராக்கப்பன் …

“ வீண்பழி சுமத்திய இவனைச் சுட்டால் தான் என்ன? சுட்டால்…. இன்னும் தண்டனை தீவிரமாகும். வெளியே வரவே முடியாது. மகளின் வாழ்வு சின்னாபின்னமாகி விடுமே என்று நினைத்தான்.

நடுங்கிய கைகளால் ….ரிவால்வரின் டிரிக்கரில் விரலை வைத்தான்….ஆனால் மீண்டும் யோசித்து…. ரிவால்வரை வண்டிக்குள்ளேயே போட்டுவிட்டான். அமைதியானான். .

இன்ஸ்பெக்டர் தட்டுத் தடுமாறி…. சுதாரித்து எழுந்து கீழே விழுந்துகிடந்த துப்பாக்கியைத் தனது இடுப்பில் செருகிக் கொண்டார்.

போலீஸ் ஸ்டேஷனை ஜீப் சென்றடைந்தது.

ஜீப்பிலிருந்து இறக்கி மறுபடியும் லாக்கப்பிற்குள் ராக்கப்பனை தள்ளும்போது… டேய்! தப்பிச்சுட்டோம்னு நினைச்சிக்காதே . அடுத்த வாரம் நிச்சயம் தண்டனைதான்” என்றார் இன்ஸ்பெக்டர்

லாக்கப்பில் உள்ளேயிருந்து

”ஐயா, நான் நிரபராதிங்கிறது ஒங்க மனசாட்சிக்கு தெரியும். என் மகளை அநாதையாக்கிடாறீங்க… இந்த பாவம் ஒங்களைச் சும்மாவிடாது. நாசமா போயிடுவீங்க” என சபித்தான்.

“போடா, போக்கத்தவனே. நான் பிடிச்சு தண்டனை வாங்கி கொடுத்தவங்க எல்லாம்தான் சாபம் விடுறாங்க. பாவம், புண்ணியம், சாபம் இதெல்லாம் பார்த்தா போலீஸ் வேலைக்கு ஒதவாதுடா”

ஒழுங்கா லாக்கப்லே வாயமூடிக்கிட்டு இருடா” அதட்டிவிட்டு வெளியேறினார்.

வெளியே போய்விட்டு ஸ்டேஷனுக்கு திரும்பியவர், ”ஐயா எதுக்குங்க பயப்படுறீங்க. அவன்மேல ஸ்டாராங்கா வழக்கு பதிவு செஞ்சாச்சு தப்பிக்கவே விடமாட்டேன். நீங்க நிம்மதியா இருங்க- ன்னு யாருக்கோ தகவலாக அடிக்கடி சொன்னார்.

“ ஐந்துநாள் முடிந்தது….. ஆறாவது நாள்…. மறுநாள் ராக்கப்பனை கோர்ட்டில் நிறுத்திவிடலாம்- உறுதியாய் இருந்த இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி…அந்த ஆறாவது நாள் அவனது ஸ்டேஷனுக்கு மாவட்ட கண்காணிப்பாளரின் ஆய்வு எனத் தகவல் வந்தது.

மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டேஷனை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, குற்றவாளிகள் விவரம் வழக்குகள் விவரங்கள், காவலர்களின் விவரங்கள் எல்லாவற்றையும் விசாரித்தார்.

“ மிஸ்டர் கேஸ்-லாம் ஒழுங்கா போகுதா? ஒங்ககிட்ட ஒப்படைச்ச எல்லா பொருட்களும் ரிவால்வர்களும் ஆவணங்களும் ஒழுங்கா வைச்சிருக்கீங்களா? எங்கே, ஒங்க ரிவால்வரைக் கொடுங்க பார்க்கலாம்”

இன்ஸ்பெக்டர் ராமரத்தினமும் ரிவால்வரை எடுத்து கொடுக்க… மாவட்ட கண்காணிப்பாளர் ரிவால்வரை திறந்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சி….

“மிஸ்டர்….ஆறாவது புல்லட் எங்கே? ” ராமரத்தினத்திற்கு வியர்வை ஆறாக ஓடத்துவங்கியது.

ஸார்…. கைதிய வேன்ல கூட்டிட்டு வரும்போது சின்ன ஆக்ஸிடென்ட் அப்போ எங்கோ தவறி விழுந்திருக்கும் போல இருக்குது ஸார்” என்றார்.

“என்ன மிஸ்டர், விழுந்தா எல்லா தோட்டக்களும்தானே விழுந்திருக்கணும்.

எங்கே அந்த ஆறாவது புல்லட்? குரலில் கடுரம் தென்பட்டது.

“பொறுப்பில்லாம, தோட்டாவைத் தவறவிட்டிருக்கீங்க. அந்த புல்லட்டை யாராச்சும் தவறா யூஸ் பண்ணா போலீஸ் டிப்பார்ட் மெண்டுக்குத்தான் கெட்டபேர்…

ஸோ, நவ் யூ ஆர் சஸ்பெண்ட் பார் திரீ மன்த்ஸ். ஒங்க பொறுப்பை வேற ஒரு இன்ஸ்பெக்டருக்கு ஒப்படைச்சிடுங்க. அவர் பார்த்துக்குவார், யூ மே கோ நெள ”.

மறுநாள் கோர்ட்டு குற்றவாளி கூண்டில், ராக்கப்பன் “ஐயா, நான் நிரபராதி, அந்த இன்ஸ்பெக்டர் என் மேல பொய் கேஸ் போட்டிருக்காரு” கதறிவாறே இருந்தான்.

“ராக்கப்பா அமைதியா இரு” என்று உத்தரவிட்டு சாட்சிகளிடம் குறுக்கு விசாணை நடத்த உத்தரவிட்டார்…

சாட்சிகள் இப்பொழுது “ஐயா, அன்னைக்கு கொலை நடக்குறப்போ பார்த்த ஆளு இவருதான்னா-ன்னு சந்தேகமாயிருக்கு“ன்னு அந்தர் பல்டியடித்தார்கள்.

“சந்தர்ப்ப சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வைத்து ஆராய்ந்த்தில் போலீஸ் தரப்பு வேண்டுமென்றே ஒரு நிரபராதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது தெளிவாகிறது.

எனவே ராக்கப்பனை விடுதலை செய்யவும் உண்மையான குற்றவாளியை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துமாறும் உத்தரவிடுகிறேன்” என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதியை வணங்கிவிட்டு வீட்டுக்கு வந்த ராக்கப்பன் தன் மகளிடம்“

கண்ணு இராசாத்தி… அந்த பல்லாங்குழியை எடுத்து வா விளையாடலாம் என்றான்.

அவளும் பல்லாங்குழியும் அதற்கான முத்துக்களையும் எடுத்து வைத்தாள்.

அந்த பல்லாங்குழி முத்துக்களோடு…. அந்த ஆறாவது புல்லட்டுமிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *