செய்திகள்

ஆர்ஜிதம் செய்த நில விவகாரம்: செங்கல்பட்டு வருவாய் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, ஏப். 24

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கோரிய வழக்கில் நில உரிமையாளரை அலையவிட்டதாக செங்கல்பட்டு ஆர் டி ஓ வுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தேவநேரி பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழியாக மாற்றுவதற்கு தங்களது நிலத்தை 2015ம் ஆண்டு நெடுஞ்சாலை கையகப்படுத்தியதாக மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவை விட கூடுதலாக 226 சதுர அடி நிலத்தை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக்கொண்டதாகவும், எனவே அந்த நிலத்தை தனக்கு ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் மாற்றாக வேறு நிலம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலைகழித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலை மேம்பாட்டு கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் தவறுதலாக 826 சதுர அடி கையகப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி செங்கல்பட்டு ஆர்.டி.ஓ உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை அழைக்கழித்தது மட்டுமல்லாமல்,நீதிமன்றத்திற்கும் உரிய பதில் மனு தாக்கல் செய்யாத செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆர்டிஓக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். அவரிடம் அபராத தொகையை மாவட்ட ஆட்சியர் வசூலித்து மனுதார்ருக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக, உரிய இழப்பீட்டுத் தொகையை தற்போதைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்றும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை பைசல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *