தலையங்கம்
நார்வே நாட்டின் வடமுனையில் உள்ள ஒரு சிறிய நகரமான லோங்க்கியர்பயனில் 2023–ம் ஆண்டு, மேலண்ட் மேயராக மேக்னஸ் பதவியேற்றார். அவரது மேயராக இருந்த வெறும் சில மாதங்களில் மூன்று சீனத் தூதர்கள் நேரில் வந்து அவரைச் சந்தித்தனர். “சீனா வல்லரசாக வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வந்தனர்,” என்கிறார் மேக்னஸ்.
சாதாரணமாக ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா பற்றி யாரும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் ஆர்க்டிக்கில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதற்கான தனது இடத்தை உறுதி செய்ய சீனா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நிலவியல் உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் வளங்களை நோக்கி சீனா தனது பார்வையை திருப்பியுள்ளது.
ஆர்க்டிக் பிராந்தியம் என்பது புவியின் வட முனையைச் சுற்றி அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆர்க்டிக் பெருங்கடல், கனடாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. ஆர்க்டிக் பிராந்தியம் புவியின் வடமுனையைச் சுற்றி அமைந்துள்ளது, அண்டார்டிக் கண்டத்தைவிடவும் குளிர் குறைவாக உள்ளது.
24 நேர மண்டலங்கள், எட்டு நாடுகள், மூன்று கண்டங்கள், பல்வேறு காலநிலைகள், வளர்ச்சி நிலைகள் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளுடன் பரந்து விரிந்து உள்ளது.
ஆர்க்டிக் பிராந்தியம், இந்தியாவின் நலன்களில் வடக்கு கடல் பாதையின் (என்எஸ்ஆர்) உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரிப்பது, எரிவாயு, முக்கியமான கனிமங்கள் போன்ற வளங்களினால் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நிலக்கரி, வைரங்கள், துத்தநாகம் மற்றும் அரிய மண் உலோகங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆர்க்டிக்கின் உருகும் பனிக்கட்டி இந்த வளங்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது, இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
சீனா, தன்னை “ஆர்க்டிக்கிற்கு நெருக்கமான நாடு” என்று விவரிக்கிறது. ஆனால், அதன் வடக்குப் பகுதியான ஹர்பின் நகரமும் தென்துறையில் உள்ள வெனீஸ் நகரமும் ஒரே அட்சரேகையில் உள்ளன – இது அதன் வாதத்திற்கு சந்தேகம் எழுப்புகிறது. இருப்பினும் ஆர்க்டிக்கில் இடம் பிடிக்க சீனா ரியல் எஸ்டேட் முதலீடுகள், கட்டுமானத் திட்டங்கள் மற்றும் ஆய்வுப் பங்களிப்புகள் மூலம் தன்னைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறது.
வேகமான மாற்றங்களால், ஆர்க்டிக் தற்போது உலகின் மிகவும் போட்டிக்குரிய பிராந்தியமாக மாறி வருகிறது. சீனாவிற்கு எதிராக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நிலம், வளம் மற்றும் சமுதாய நலன்களுக்காக போட்டியிடுகின்றன.
வளர்ந்துவரும் வெப்பமயமாதலால் ஆர்க்டிக் பிராந்தியம் மற்ற பிரதேசங்களைவிட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது அப்பகுதியில் வாழும் வனவிலங்குகள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆர்க்டிக்கின் உருகும் பனி இமயமலையில் ஏற்படும் பனிப்பாறை மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.
பூமியின் 4% நிலப்பரப்பை கொண்ட ஆர்க்டிக், உலகத்திலேயே பெரிய மற்றும் நுணுக்கமான பிராந்தியங்களுள் ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் நிலம், வளம், மற்றும் உள்நாட்டு ஆதிக்கத்தை நோக்கி சீனாவின் பயணம், உலக வல்லரசுகளின் பார்வையையும் மாற்றி அமைத்துள்ளது.
– “ஆர்க்டிக் பந்தயம்” இப்போது தொடங்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.