சிறுகதை

ஆராய்ந்து செயல்படு | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 19

தூக்கி வினை செய்

(விளக்கம்: நன்கு ஆராய்ந்து எந்த செயலையும் செய் )

* * *

காலை நேரம் ஜெராக்ஸ் கடை பரபரப்பாக காணப்பட்டது.

ஜெராக்ஸ் எடுக்கவும் டைப் செய்யும் வாடிக்கையாளர்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தனர்.

அங்கிருக்கும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து கொண்டிருந்தனர்.

அந்த ஜெராக்ஸ் கடையின் மேலாளர் திலீப் அங்கு நடைபெற்று வரும் வேலைகளை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

திலீப் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் 8 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார்.

ஜெராக்ஸ் எடுக்கும் ஊழியராக வேலைக்கு சேர்ந்த அவர் படிப்படியாக தனது திறமையான உழைப்பால் மேலாளர் பணிக்கு உயர்ந்தார்.

அந்த ஜெராக்ஸ் கடைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் முரளி.

அவர் தனது நிறுவனத்தின் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி அங்கு வருவது உண்டு.

அப்போது முரளியும் திலீப்பும் நண்பர்களானார்கள்.

வழக்கம் போல் தங்கள் நிறுவனன் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க வந்தார் முரளி.

வாங்க முரளி சார் வாங்க… என்று அவரை வரவேற்ற திலீப், அவரிடமிருந்து ஆவணங்களை வாங்கி ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஊழியரிடம் கொடுத்தார்.

முரளி சார் உங்களிடம் கொஞ்சம் பேசனும் என்று அவரை அழைத்துக் கொண்டு ஜெராக்ஸ் கடையை வீட்டு வெளியே வந்த திலீப் அருகில் இருந்த டீக் கடைக்குள் வந்தார்.

அங்கு முரளியும் திலீப்பும் டீ ஆர்டர் செய்தனர்.

என்ன திலீப் என்ன விஷயம் என்று முரளி கேட்டார்.

நான் வேலையை விட்டு நிற்கலாம் நினைக்கிறேன் என்று திலீப் கூறினார்,

ஏன் என்ன ஆச்சு திலீப் என்று அதிர்ச்சியுடன் கேட்டார் முரளி

வேலை பார்த்தது போதும் ஏதாவது தொழில் தொடங்கலாம்னு நினைக்கிறேன்.

அப்படியா? ரொம்ப சந்தோஷம் திலீப். என்ன செய்ய போறீங்க.

எங்க வீட்டு பக்கத்தில் ஒரு கடை ஒன்று குறைந்த வாடகைக்கு வருது. அதில் ஜெராக்ஸ் கடை நடத்தலாம்னு நினைக்கிறேன் என்றார்.

அதுக்கு முதலீடு கொஞ்சம் அதிகமா? வைக்கனுமே…. பணம் உங்களிடம் ரெடியா இருக்கா.

என் கையில் கொஞ்சம் பணம் இருக்கு. அது போக என் மனைவி நகையை அடகு வைத்து கொஞ்சம் பணம் தயார் செய்யலாம்னு நினைக்கிறேன்.

வேலையை விட்டு நிற்கபோவதை உங்கள் நிறுவன உரிமையாளரிடம் கூறிவிட்டீர்களா?

இல்லை முரளி சார் இனிமே தான் சொல்லனும்.

அப்படின்னா… கொஞ்சம் அவசரபடமா யோசிச்சு முடிவு பண்ணுங்க.

திலீப் நீங்க கடை வைக்கும் இடம் உங்க தொழிலுக்கு ஏற்ற இடமா? என்ற விஷயங்களை எல்லாம் கொஞ்சம் ஆராய்ந்து செயல்படுங்க.

தொழில் தொடங்கினா? அதில் நாம் கொஞ்சம் காலூன்றி முன்னேற குறைஞ்சது ஆறு மாசம் ஆகும். அதுவரைக்கும் நம்ம குடும்ப செலவையும் பார்க்கனும்.

இல்ல முரளி சார் இப்படியே யோசிச்சு யோசிச்சு காலம் தான் ஓடிக்கிட்டு இருக்கு. எதுவும் செய்ய முடியலை.

அதனால் வேலையை விட்டுட்டு சொந்தமாக கடை போடலம்னு முடிவு பண்ணிட்டேன் என்றார் திலீப்.

சரி திலீப் எது செய்தாலும் ஆராய்ந்து செயல்படுங்க என்று அறிவுரை கூறிய முரளி, ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்த தனது ஆவணங்களை வாங்கிக் கொண்டு தனது அலுவலகத்திற்கு புறப்பட்டார்.

திலீப் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

6 மாதங்கள் ஆனது.

ஒரு நாள் முரளி தனது அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அங்கு திலீப் வந்தார்.

என்ன திலீப் எப்படி இருக்கீங்க. பாத்து ரொம்ப நாாளச்சு. உங்க தொழில் எப்படி போய்கிட்டு இருக்கு என்று முரளி நலம் விசாரித்தார்.

வணக்கம் முரளி சார். நான் நல்லா இருக்கேன் என்று ஒரு வரியில் வார்த்தையை முடித்தார் திலீப்.

முரளி விடவில்லை. திலீப் உங்க கடை எப்படி ஓடாது… வருமானம் நல்லா இருக்கா என்று மாறி மாறி கேட்டார்.

அப்போது திலீப்பின் குரலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

இல்ல முரளி சார் எங்கள் வீட்டு பக்கத்தில் ஜெராக்ஸ் கடை போட்டேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் நல்லா போய்கிட்டு இருந்தது.

இரண்டு பேரை வேலைக்கு போட்டு டிடிபி சென்டராக மாற்றினேன்.

இரண்டு மாதமா வட்டி கட்டுறதுக்கும் கடை வாடகை, சம்பளம் கொடுக்கிறதுக்கும் தான், வருமானம் சரியா இருக்கு. கையில் கொஞ்சம் கூட பணம் சேரலை. கடன் கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று வார்த்தைகளை முழுங்கியவாறு கூறினார்.

என்ன ஆச்சு…. என்று ஆச்சரியத்துடன் கேட்டார் முரளி.

அதுதான் கடையை விட்டுட்டு மறுபடியும் வேலைக்கே வந்திடலாம்னு நினைக்கிறேன்.

அதுதான் உங்களை பார்த்து ஒரு யோசனை கேட்கலாம்னு வந்தேன் என்று திலீப் கூறினார்.

இதை தான் நான் அப்பவே சொன்னேன். எது செய்தாலும் கொஞ்சம் ஆராய்ந்து செயல்படுனும்னு.

நீங்க சொந்தமா கடை வைத்தது சரியான செயல்.

கடையை உங்க வீட்டுக்கு பக்கத்தில் போடலாமா? எங்காவது அரசு அலுவலகம், கல்லூரி அருகில் போட்டால் நன்றாக இருந்திருக்கும்.

நாம் செய்யும் தொழில், நாம் அமைக்கும் இடத்திற்கு உகந்ததா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.

சரி பரவாயில்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.

இனி மேலாவது என்ன செய்தாலும் கொஞ்சம் ஆராய்ந்து செயல்படுங்க.

கடையை எங்கு போட்டால் வியாபாரம் நடக்கும்னு கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்க.

அந்த இடத்திற்கு கடையை மாற்றுங்கள் என்று யோசனை கூறினார் முரளி.

முரளியின் யோசனை திலீப்புக்கு நன்றாக இருந்தது.

சார் நீங்க சொல்றது சரிதான். நன் வேறு இடத்தில் கடை நடத்த யோசிக்கிறேன் என்று கூறிய திலீப் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

* * *

முரளி சொன்னது போல் தனது கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான வேலையில் இறங்கினார் திலீப்.

பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் கடை ஒன்று வாடகைக்கு வந்தது. அந்த இடத்திற்கு தனது கடையை மாற்றினான் திலீப்.

அதன் பின் அவரது வியாபாரம் கொஞ்சமாக கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்தது.

மீண்டும் ஒரு நாள் முரளியை சந்தித்த திலீப் தனக்கு யோசனை வழங்கியதற்கு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *