சிறுகதை

ஆரம்பம் – ராஜா செல்லமுத்து

தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்கள் வந்து போகும் ஒரு பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள், நாய்கள் வந்து குவியும். காரணம் அவர்கள் மிச்சம் வைக்கும் உணவுகளைச் சாப்பிடவும் அவர்கள் அன்பளிப்பாகக் கொடுக்கும் உணவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் பறவைகளும் நாய்களும் அங்கு ஒன்றாகக்கூடும்.

நல்ல ஈர மனமுள்ள மனிதர்கள் தாங்கள் சாப்பிடுவது மட்டுமில்லாமல் கத்திக் கொண்டிருக்கும் பறவைகளுக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் நாய்களுக்கும் பங்கிட்டே உணவைச் சாப்பிடுவார்கள்.

சிலர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற காரணத்திற்காக அவைகளை விரட்டி விடுபவர்களும் அங்கு உண்டு . இதையெல்லாம் தினந்தோறும் கவனித்துக் கொண்டே இருப்பான் சேகர்

மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் காத்திருக்கின்றன. மனிதர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கூட பறவைகளும் நாய்களும் தங்களுக்கான உணவைத் தேடிக் கொள்கின்றன. மனிதர்களில் சில மனிதர்கள் கூட எதிர்பார்த்து தான் காத்துக் கிடப்பார்கள்.

அந்தப் பூங்காவில் இருந்த பறவைகளும் நாய்களும் கூட அப்படித்தான் .எப்படியாவது இந்த மனிதர்கள் நமக்கு உணவு கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் அவை எல்லாம் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டான் சேகர்

எப்போதும் போல அன்று மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதர்களைச் சுற்றி நாய்களும் பறவைகளும் அமர்ந்திருந்தன. சிலர் அதற்கு உணவளித்தார்கள் சிலர் துரத்தி விட்டார்கள் .

ஒரு சிலர் கொடுத்த உணவுகளை நாய்களும் பறவைகளும் சண்டையிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேகருக்கு மனம் வலித்தது. இந்த உயிர்கள் உணவுக்காக தான் வாழ்கின்றன.

இந்த உணவைத் தேடி மனிதர்கள் எவ்வளவு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அது போல தான் பறவைகளும் விலங்குகளும் அலைகின்றன என்று வருந்தினான் சேகர் .

மறுநாள் முதல் அந்தப் பூங்காவிற்கு தினமும் பறவைகளுக்கும் நாய்களுக்கும் உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

முன்பெல்லாம் யார் சாப்பிடுகிறார்கள் அவர்கள் யாராவது நமக்கு கொடுப்பார்களா? என்று ஏங்கி அவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்த நாய்களும் பறவைகளும் சேகர் வந்தால் அவன் பின்னாலேயே அத்தனையும் ஓடின.

இதைப் பார்த்த அந்தப் பூங்கா காவலாளி இதான் யா மனுசங்கறது முதல்ல எல்லாம் யாராவது சோறு போடுவாங்களான்னு காத்துகிட்டு இருந்த நாய்களும் பறவைகளும் இன்னைக்கு சேகர் மாதிரி ஒரு மனுசன் ஈர மனசோட அந்த நாய்களுக்கும் பறவைகளுக்கும் சாப்பாடு போடுறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது மட்டும் இல்ல சேகர் போடறது இதுகளுக்கு உணவு கொடுக்கணும் அப்படிங்கிற நல்ல மனசோட தான் சாப்பாடு போடுறார் . மத்தவங்க எல்லாம் அவங்க சாப்பிட்டது போக மிச்சத்தையோ அல்லது போனா போகட்டும் அப்படின்னு தான் போடுறாங்க .

ஆனா சேகர் அப்படியில்ல. இதுகளுக்காகவே தன்னோட மனசு நிறைஞ்சு உணவுகளை வாங்கிட்டு வந்து போடுறார் என்று அந்த பூங்கா காவலாளி சொன்ன போது அந்த பறவைகளும் நாய்களும் அவ்வளவு ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

மறுநாள் சேகர் உணவு பொட்டலங்களோடு அந்தப் பூங்காவிற்குள் நுழைந்தான். இன்னொருவரும் அதே போல உணவு பொட்டலங்களோடு பூங்காவிற்குள் நுழைந்தார்.

என்ன சார் யாருக்கு இந்த உணவு? என்று சேகர் கேட்க

சார் நீங்க இந்த பறவைகளுக்கும் நாய்களுக்கும் உணவு கொடுக்கிறத பார்த்தேன். ஏன் நாமளும் அதுகளுக்கு உணவு கொடுக்க கூடாதுன்னு எனக்கு ஒரு எண்ணம் தோணுச்சு. அதான் நானும் வாங்கிட்டு வந்துட்டேன் என்று அவரும் சொல்ல இருவரும் சேர்ந்து பறவைகளுக்கும் நாய்களுக்கும் உணவளித்தார்கள்

மறுநாள் இன்னும் இரண்டு பேர் உணவு வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அதன் மறுநாள் இன்னும் இரண்டு பேர் இப்படி ஒவ்வொருவராக மாறி மாறி அந்தப் பூங்காவில் இருந்த நிறைய பேர் சுயமரியாதையோடு அந்தப் பறவைகளுக்கு தனித்துவமாக உணவளிக்க வேண்டும் என்றும் அவரவர் உணவு பொட்டலங்களை வாங்கி வந்தார்கள்.

இப்போது சேகருக்கு கண்ணீர் வந்தது .எந்த விஷயமாக இருந்தாலும் ஆரம்பிக்கிறது தான் கஷ்டம் .ஆரம்பிச்சு வச்சுட்டோம்னா நல்லது எதுவாக இருந்தாலும் இந்த மனுசங்க மனசுல தீ மாதிரி பத்திக்கிரும். தொடங்கி வைக்கிறதுக்கு தான் ஆள் இல்ல என்று வருத்தப்பட்டான்.

அது முதல் அந்தப் பூங்காவிற்கு நிறைய பேர் உணவு வாங்கி வந்தார்கள்.

ஆனால் நன்றியை மறக்காத நாய்களும் பறவைகளும் கரிசனையோடு தான் பார்த்துக் கொண்டிருப்பது சேகரை மட்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *