செய்திகள்

ஆரணி புதிய மாவட்டம்: எடப்பாடி அறிவிப்பு

அம்மாவின் அரசு மீண்டும் அமைந்ததும்

ஆரணி புதிய மாவட்டம்: எடப்பாடி அறிவிப்பு

அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டுகிறார்கள் என குற்றச்சாட்டு

ஆரணி, மார்ச் 22–

அண்ணா தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (21–ந்தேதி) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

இன்றைக்கு ஆரணி என்றால் அண்ணா தி.மு.க கோட்டை. எளிமையானவர், சாதாரணமானவர், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர், இந்த மண்ணின் மைந்தர், நடை பெறுகின்ற சட்டமன்ற தேர்தலிலே, ஆரணி சட்டமன்ற தொகுதியிலே அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்.

நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி

இந்தப்பகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி, நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு செய்து வருகின்றது. அந்த வகையில், கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் ரூபாய் 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். கைத்தறி ஆடைகளுக்கும் முழு வரி விலக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். நெசவாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் நூல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.

ஏமாற்றி முதல்வர் ஆனவர் கருணாநிதி

மக்கள் செல்வாக்கு வாய்ந்த கட்சி அண்ணா தி.மு.க தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி, வெற்றிக் கூட்டணி. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்து பேசுவது, ஒருவரை இகழ்ந்து பேசுவது என தரம்தாழ்த்தி பேசும் ஒரே தலைவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான். அவர் உண்மையைப் பேசுவதே கிடையாது.

நான் முதலமைச்சர் ஆவதற்கு ஊர்ந்து போனேனாம். எனக்கு என்ன கால் இல்லையா? நான் என்ன பாம்பா, பல்லியா. ஊர்ந்தும் போகவில்லை, நகர்ந்தும் போகவில்லை. நடந்து போய் பதவி ஏற்றுக் கொண்டேன். கருணாநிதி எவ்வாறு முதலமைச்சராக ஆனார். அண்ணா மறைவுக்குப் பின்னர், நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்த போது குறுக்கு வழியில் சென்று முதலமைச்சர் ஆனவர் கருணாநிதி. நாங்கள் அப்படியெல்லாம் ஆகவில்லை. எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனால் முதலமைச்சர் ஆனேன். ஆனால் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியனை ஏமாற்றி முதலமைச்சர் ஆனார். ஆக இவர்கள் வந்த வரலாறு வேறு, நாங்கள் வந்த வரலாறு வேறு. ஒரு தலைவர் என்றால் தகுதி வேண்டும். பண்பு வேண்டும். அந்த தகுதியே இல்லாத தலைவர் என்றால் அது ஸ்டாலின் தான். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. எனென்றால் அவருக்கு நாட்டு மக்களைப் பற்றியும் தெரியாது, நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது.

யாராவது எழுதிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு படிப்பார். ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை இப்பொழுதே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். ஏதோ முதலமைச்சர் ஆனதைப் போல மிரட்டுகிறார். நானும் 4 வருடங்களாக முதலமைச்சராக இருக்கின்றேன். ஒரு அதிகாரியைக் கூட மிரட்டியது இல்லை. அவர்களிடத்தில் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அவர்களிடம் அன்பாக பேசி, அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்க்க வேண்டும். அரசாங்கம் போடும் சட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தான் இருக்கின்றது. அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசாங்கத்திற்கே பெயர் கிடைக்கும்.

மிரட்டியே பழக்கப்பட்டவர்கள்

எங்கள் அரசாங்கத்திற்கு பெயர் கிடைப்பதற்கு அதிகாரிகள் ஒரு காரணம். ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, நான் வந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? என்று அதிகாரிகளையே மிரட்டுகிறார். அவருடைய மகன் உதயநிதியும் மிரட்டுகிறார், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? திமுகவில் இளைஞர் அணியில் ஒரு பொறுப்பு மட்டும்தான் அவருக்கு இருக்கிறது. அவருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? நாங்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால், என்று டிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரியையே மிரட்டுகிறார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே இவ்வளவு திமிர் இருக்கிறதென்றால் ஆட்சி, அதிகாரத்தை இவர்கள் கையில் கொடுத்தால் நாடு தாங்குமா? இவ்வாறு மக்களை, அதிகாரிகளை மிரட்டுவது திமுகவின் வரலாறு. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று கிராமங்களில் சொல்வதைப்போல, மிரட்டியே பழக்கப்பட்டவர்கள் அவ்வாறுதான் செய்வார்கள். 6 கியாஸ் சிலிண்டர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 6 கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். அனைத்து குடும்பத்திற்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 6 சவரனுக்கும் குறைவாக அடமானம் வைத்து பணம் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து இல்லங்களுக்கும் கேபிள் இணைப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு லைசென்ஸ் வழங்கப்படும். குடும்ப அட்டை ஒவ்வொன்றிற்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

ஆரணி புதிய மாவட்டம்

தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். உங்கள் அனைவரின் கோரிக்கைகளை ஏற்று, அம்மாவின் அரசு அமைந்தவுடன், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

அம்மாவின் அரசு உங்களுடைய அரசு, மக்களின் அரசு என்பதை தெரிவித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து நமது வெற்றி வேட்பாளர் சேவூர் எஸ். ராமச்சந்திரனை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *