நாடும் நடப்பும்

ஆயூஷ் அமைச்சகத்தை விழிப்புடன் செயல்பட தவறி விட்டார் மோடி

சித்த, ஓமியோ மருத்துவ சிறப்புகளை உணர்வோம்

நாடெங்கும் கொரோனா பெரும் தொற்றின் பரவல் சுனாமி அலை போல் பெருகி வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

பங்குச்சந்தை குறியீடும் வீழ்ச்சியை கண்டு வருவது நாம் சந்திக்க இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை தான் சுட்டிக் காட்டுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில் மருத்துவ வசதிகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

பல இல்லங்களில் ஒரே சமயத்தில் குடும்பத்தார் அனைவரும் பாதிப்படைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் மனவேதனையுடன் இருப்பதைப் பார்த்து வருகிறோம். அப்படிப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மரணமடைந்து விட்டால் அக்குடும்பத்தார் செய்வதறியாது தவிப்பதையும் கதறல்களையும் கேட்கும் போது நெஞ்சம் பாரமாகித் தவிக்கிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அதிகரித்து வருவது புரிகிறது. அந்த வரிசையில் பிரதமர் மோடி மே 1ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பரவல் திடீரென இப்படி சுனாமி அலையாய் பெருகிடக் காரணம் என்ன?

மதம் சார் திருவிழா, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் போன்ற பல சம்பவங்களை சுட்டிக் காட்டி குறை கூறுவது ஒரு பக்கமிருக்க, கோவிட் –19 வைரசை முழுமையாக வீழ்த்துவது எப்படி?

‘நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்று ‘மருந்து’ என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் நமக்கு கூறியதை மறந்து விடக்கூடாது.

அதன் பொருள் நோய் என்னவென்று ஆராய்ந்து, அந்நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியை தெரிந்து கொண்டு உடலுக்கு ஏற்ற சிகிச்சை தரவேண்டும் என்கிறார்.

கோவிட் – 19 பற்றிய ஆய்வுகள் அதிகமாக அதை வீழ்த்தும் எதிர்ப்பு சக்திகளை கொண்ட மருந்து மற்றும் மருத்துவத்தை பற்றியே இருப்பது இதுவரை சரி தான்.

தொற்றின் பாதிப்பால் துயரப்பட்டவர்களுக்கு அதன் வீரியத்தை குறைக்க வழிகளை கண்டுபிடித்துள்ளோம். எதிர்ப்பு சக்தியை பெற தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளோம்.

அப்படி இருந்தும் இரண்டாம் முறையாக கொரோனாத் தொற்றை பெற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் நிலை பரிதாபத்துக்குரியது. மேலும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதே மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கும் கொரோனா பாதிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களுக்கு பாதுகாப்பு கவசம், சமூக இடைவெளி எல்லாம் இருந்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?

யோகாவின் மகிமை

அவர்களுக்கே பாதிப்பு என்றால் சாமானியனின் நிலை பரிதாபமானதாகத்தான் தெரிகிறது.

நோயின் காரணத்தை ஆராய்ந்தவர்கள் கூறுவது சுவாசிக்க உதவும் நுரையீரல் பாதிப்பு தான் அதிமுக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நாம் ஆண்டுக்கு ஆண்டு யேகா செய்யும் ஜூன் 21–ந் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகையே கடைப்பிடிக்க வைத்தார் மோடி. அவரும் அன்றாடம் பயிற்சி செய்வதாக வீடியோக்களை வெளியிட்டும் உள்ளார்.

யோகாவும் பிராணாயாமா அதாவது மூச்சுப் பயிற்சியும் நுரையீரலை வலுப்பெறச் செய்யும் தன்மை கொண்டதாகும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்போது இவற்றை கண்டிப்பாக பயிற்சி செய்ய வேண்டும்.

பள்ளிக்கூட வகுப்புகள், அலுவல் வேலைகள் என பலவற்றை வீடியோ வசதியுடன் ஆன்லைன் சமாச்சாரமாக மாறிவிட்டது போல் இப்படி அன்றாட உடற்பயிற்சியையும் அனைவரும் செய்திட மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும்.

பிரதமர் மோடியின் உத்தரவால் புதிதாக உருவான ஆயுஷ் அமைச்சகம் நமது பாரம்பரிய மருத்துவத்திற்கு என விசேஷசமாக உருவானது. அதன் குறிக்கோள் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படுவது தான்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நோயாளிகளில் லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாதவர்களுக்கான ஆயுர்வேத மருத்துவ முறை பயன்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிட்டுள்ளார்.

ஆயூஷ் அமைச்சக பரிந்துரை

இதில் உணவு தொடர்பான அறிவுறுத்தல்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மூலிகைகள், அஷவகந்தா மற்றும் ஆயுஷ் – -64 போன்ற மருந்துகள் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆயுர்வேத மருந்துகள், தற்கால நோய்கள் பலவற்றை தீர்ப்பதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.

“சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களில், கோவிட்–19 க்கு எதிரான நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்கும். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு அது தீவிரமடையாமல் தடுப்பதற்கும் ஆயுர்வேதமும் யோகாவும் பெரிதும் உதவியுள்ளன” என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் கொரோனா தொற்று சற்றே தணிந்த வந்த நிலையில் இந்த அமைச்சகம் உரிய பணியாற்றாததால் தான் சமீப பரவல் தொடர்கிறது.

இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ஆயூஷ் அமைச்சக குறிக்கோள்களை மனதில் கொண்டு செயல்பட முனைப்பு காட்ட வேண்டும்.

சித்த மருத்துவர்கள் பரிந்துரை

உடலில் நோய் எதிர்ப்பாற்றல் திறம்பட செயல்பட்டால், கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை பெருமளவில் குறைத்துவிட முடியும். உணவு, மருந்து மற்றும் உடற்பயிற்சி மூலம் நமது நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க முடியும். சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான பண்டைய மருத்துவ முறை ஆகும்.

சித்தர்கள் கூறிய மருந்துகள், வாழ்க்கை முறைகள், மூச்சுப் பயிற்சிகள் முதலானவை எல்லாம் முறையாகத் தொகுக்கப்பட்டு தற்போது இந்திய மருத்துவ முறைக்ளில் ஒன்றாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஒரு மருத்துவ முறையாகவும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஓமியோபதி

சென்னையில் உள்ள பிரபல ஓமியோபதி மருத்துவர் ஜெயக்குமார் இதுபற்றி கூறும்போது

கொரோனா நோய் பாதிப்பு சீனாவில் ஏற்பட்டதிலிருந்து நோயின் தன்மைகளை கவனித்து வந்தோம். இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 3–வது வாரத்திலேயே ஆயூஷ் அமைப்பு ஓமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்ப்-30 மருந்தை சிபாரிசு செய்திருந்தது.

அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுவதற்கு, வைட்டமின் டி3 பெருமளவு உதவுகிறது. எனவே மக்கள் காலை, மாலை வேளைகளில் சூரிய ஒளியை அரை மணி நேர அளவுக்கு, வீட்டுக்கருகிலேயே வாய்ப்புள்ள இடத்தில் பெறுவது நல்லது. இது தசைகள் இறுக்கமாவதை தடுக்கும். அதேபோல், நுரையீரலின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவும்.

மேலும் அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், முருங்கைக்கீரை, காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எளிதான உடற்பயிற்சிகள், முக்கியமாக மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவை உடலுக்கு எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வந்த நாம் பாரம்பரிய உணவுகளை புறம் தள்ளி விட்டு ஆங்கிலேயர்கள் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள காபி, டீ, ரொட்டி, பதனிடப்பட்ட உணவு, உடற்பயிற்சியில்லா வாழ்வு முறை என மாறி விட்டோம்!

பாரம்பரிய சிறப்பு

இனியும் தாமதிக்காமல் தடுப்பூசியை மட்டும் நம்பியிராமல் நமது பாரம்பரிய வாழ்வு முறைக்கு மாற கவனம் செலுத்துவோம்.

சமூக விலகல், முகக்கவசம், கைகளை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் ஊரடங்கு எல்லாம் மிக மிக அவசியம் தான்.

ஆனால் நோயே வராமல் இருக்க அன்றாட உடற்பயிற்சியை அனைவரும் செய்திட வழிகாண வேண்டியது ஆயூஷ் அமைச்சகத்தின் முதல் கடமையாகும்.

ஓமியோபதி, சித்த மருத்துவங்களில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பது ஜப்பான், ஜெர்மனி முதலிய முன்னேறிய நாடுகளாகும்.

பல தலைமுறைகளாக அவற்றை நமது அன்றாட வாழ்வில் இணைந்து வாழ்ந்த நாம் அதை புறம் தள்ளிவிட்டு எல்லா பிணிகளுக்கும் உட்பட்டு நோய்வாய்ப்பட்டு திண்டாடுவது சரிதானா?

பிரதமர் மோடி கொரோனாத் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஓரளவு வெற்றி பெற்றாலும் மீண்டும் மீண்டும் பரவ விடாமல் தடுக்க வைப்பதில் செய்ய வேண்டியதை பற்றித் தீவிரமாக ஆலோசித்து மேலும் தாமதிக்காமல்

மத்திய – மாநில அரசுகள் நமது மாற்று மருத்துவத்தில் இருக்கும் வழிமுறைகளை நடைமுறை மருத்துவத்துடன் இணைந்து செயல்பட வைக்க வேண்டும்.

சித்தா, ஓமியோ , உள்நாட்டுப் பாரம்பரிய மருத்துவ சிறப்புகளை உணர்வோம்!

விழிப்புடன் செயல்படுவோம்; வரும் முன் காப்போம் !

கொரோனா பெரும் தொற்றின் பரவாமல் தடுத்து விரட்டியடிப்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *