சரியாக பகல் மூன்று மணிக்கு பூஜை நடக்கும் என்று அறிவித்திருந்தார்கள்.
தொழிற்சாலையில் இருக்கும் அனைத்து இயந்திரங்களுக்கும் ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜை போடுவது வழக்கம்.
எல்லா ஆபரேட்டர்களும் தத்தமது இயந்திரங்களுக்கு சந்தனமும் குங்குமமும் பூசி எலுமிச்சைப் பழங்களையும் செருகி, பூஜை முடிந்ததும் ஒரு முறை பயபக்தியோடு சிறிது நேரம் இயந்திரங்களை ஓட்டி நிறுத்துவர்.
“இந்த வருடம் ஒரு விபத்தும் இல்லாமல் நல்லவிதமாக இயந்திரங்களில் வேலை பார்க்கவேண்டும்.” என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வர்.
பூஜை முடிந்ததும் ஐயர் சூடத்தட்டை ஏந்தி வருவார். இரண்டு பக்கமும் ஊழியர்கள் நின்று சூடத்தை இரு கரங்களாலும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வர்.
பிறகு எல்லோருக்கும் பொரி மற்றும் இனிப்பு , பரிசுப்பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
பகல் இரண்டு மணிக்கே வந்துவிட்டார் தொழிற்சாலை மேனேஜர் அப்துல் ஹமீத்.
மூன்று மணிக்கு பூஜை ஆரம்பமானது.
சூடம் ஏந்தி ஐயர் ஒவ்வொருவராய் கடந்து வர பயபக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள ஆரம்பித்தனர்.
அவசர அவசரமாக பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக நுழைந்தார் அஸிஸ்டன்ட் மேனேஜர் ராமமூர்த்தி.
சூடத்தை எல்லோரும் ஒற்றிக்கொண்ட பிறகு ஐயர் தட்டை எடுத்துக் கொண்டு திரும்பினார்.
ராமமூர்த்தியைக் கண்டதும் தட்டை அவரிடம் காட்டினார் ஐயர்.
ராமமூர்த்தி தன் இரு கரங்களையும் சூடத்தை நோக்கி நீட்டினார்.
அடுத்த கணம்—
‘பக்’கென அவர் உள்ளங்கையில் தீ பற்றிக்கொண்டது.
“ஆ… அம்மா…” என அலறினார் ராமமூர்த்தி.
அதை சிறிதும் எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்து போயினர்.
மேனேஜர் அப்துல் ஹமீத் பாய்ந்து சென்று அவரை இழுத்துக்கொண்டு ஃபர்ஸ்ட் எய்ட் அறைக்குள் நுழைந்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சைக்காக அவரை காரில் ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குக் கூட்டிப் போகுமாறு டிரைவருக்கு உத்தரவிட்டார் அப்துல் ஹமீத்.
கூடியிருந்த அனைவரையும் பார்த்து அப்துல் ஹமீத் பேசினார்.
“அது வேறு ஒன்றுமில்லை. உள்ளே நுழையும்போது ரிசப்ஷனில் ஹேண்ட் சானிடைஸரால் கைகளைத் தேய்த்த ராமமூர்த்தி, நேரமாகிவிட்டதே என்ற அவசரத்தில் கைகளைச் சரியாகத் துடைக்காமல் அப்படியே சூடத்தை நோக்கி காட்டியிருக்கிறார். சானிடைஸர் எளிதில் தீப் பற்றி இப்படி ஆகிவிட்டது. இனி, எந்த பூஜையாக இருந்தாலும் சரி, குத்துவிளக்கு ஏற்றும்போதோ அல்லது அடுப்பைப் பற்ற வைக்கப் போனாகும் போதோ கைகளை நன்றாகத் துடைத்த பிறகுதான் நெருப்புக்கு அருகில் போகவேண்டும்.”
அப்துல் ஹமீதின் எச்சரிக்கை எல்லோரையும் விழிப்படையச் செய்தது.
எல்லோரும் அவ்வாறே செய்ய உறுதி அளித்தனர்.
அதுமட்டுமில்லாமல் தொழிற்சாலையில் நடந்த அந்த எதிர்பாராத சம்பவத்தை வீட்டில் மனைவிமார்களிடம் சொல்லி அவர்களையும் எச்சரித்தனர். பெண்கள்தானே அடுப்பில் நிறைய நேரத்தை செலவழிக்கிறார்கள்? பூஜை, புனஸ்காரம் என்று பக்தியில் அதிகம் ஈடுபடுவதும் பெண்கள்தானே? தீபம் ஏற்றுதல், மாவிளக்கு வைத்தல், கற்பூரம் பற்ற வைத்தல் போன்ற தீ சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் மிக கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர்களுக்கு உணர்த்தினார்கள்.
இது கொரோனா காலம். ஹேண்ட் சானிடைஸர் பரவலாகப் பயன்படுத்தப்படும் நேரம். இதுபோன்ற சமயத்தில் ஹேண்ட் சானிடைஸரின் அபாயத்தையும் விளக்கி எச்சரிக்கப்படுவது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்தனர் பெண்கள்.