செய்திகள்

ஆயுதப்படை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஜூன் 15–-

மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) மத்திய ஆயுதப் படை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2024) ஆகஸ்டு 4-ந்தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு 2 கட்டமாக நடந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவில் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 8 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இதுதொடர்பாக மனிதநேய அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, 2, 2ஏ போன்ற பதவிகளுக்கும் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குகிறது. அவ்வாறு பயிற்சி வழங்கியதில் இதுவரை 4,420 பேர் மாநில மற்றும் தேசிய அளவில் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

அதன்படி, மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. அதாவது நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், வல்லுனர் ஆலோசனை அமர்வு, மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் பங்கேற்று 21 பேர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் ஐஸ்வர்யன்குட்டி அகில இந்திய அளவில் 69-வது இடத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியநாராயணன் 96-வது இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தவஸ்வி அருணாச்சலம் 120-வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *