சிறுகதை

ஆயிரம் காலத்துப் பயிர் | ராஜா செல்லமுத்து

சரவணனின் நெஞ்சுக்குள் திருமணம் என்றாலே எட்டிக் காயாகவே கசந்தது. அது பற்றி எப்போது பேசினாலும் எரிந்தே விழுவான்.

“சரவணா”

“என்னம்மா” மறுபடியும் கல்யாண புராணத்த ஆரம்பிச்சிட்டயா ?

ஆமா அது பத்தி தெனமும் சொல்லிட்டே தானே இருக்கோம்; அது அது நடக்க வேண்டிய காலத்துல நடந்தா தாண்டா நல்லது. நீ இப்படியே இருந்தா நம்ம வம்சம் விருத்தியில்லாம போகும்டா. சட்டுபுட்டுன்னு காலகாலத்தில ஒரு கால்கட்டப் போடுற வழியப்பாரு. இல்ல வம்படியா நாங்களே இத செய்ய வேண்டியிருக்கும் என்றார் அம்மா தனம். அவர் பேசுவதை உடனே வழிமறித்தார் அப்பா ராமசாமி.

“ஏய் இவன் யாரையாவது அது இதுன்னு ஏதாவது செய்றானான்னு கேளு. அப்படி இப்படி ஏதாவதுன்னா கூட முடிச்சுவிட்டுரலாமே என்று அப்பா சொன்னதும் சுரீரென்று ஏறியது சரவணனுக்கு .

‘‘அப்பா ஏன் இப்படி தப்பா பேசிட்டு இருக்கே? நானென்ன முறையில்லாத ஆளா ;இல்ல கண்டபடி பொம்பளைங்க பின்னால சுத்திட்டு இருக்கனா? அதெல்லாம் ஒண்ணுமில்ல. வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காதா?

பெறகு என்னடா, ஏழு கழுத வயசாச்சு . இன்னும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருக்கே. எனக்கெல்லாம் இருவது வயசிலயே கல்யாணம் ஆயிருச்சு. நீ என்னடான்னா இம்புட்டு வயசாயும் அதபத்தி யோசிக்கக் கூட மாட்டேன்கிறியே அதான்”

“இல்லப்பா ….. எனக்கென்னமோ அதுல எனக்கு இஷ்மே இல்ல’’

“டேய் என்ன இப்படி சொல்ற. ஒடம்புக்கு ஏதும் ஆகிப் போச்சா?’’

சொல்லு, ஒரு எட்டு போயி ஆஸ்பத்திரியில பாத்திட்டு வருவோம்.

எம்மா நீ சும்மா இரும்மா. ஏதாவது ஒன்ன பேசிட்டே தான் இருப்பே

“இல்லங்க இவன இப்பியே விட்டா இன்னும் கொஞ்ச நாள்ல ஒங்களுக்கு அப்பா மாதிரி வந்த நிப்பான். காலா காலத்துல ஒரு கால்கட்ட போடவேண்டியது தான் . இல்ல இவ்வளவு சந்தானம் பந்தானமா நாம வாழ்ந்தது சும்மான்னு ஆகிப்போகும்” என்ற தனத்தின் பேச்சின் ஊடே நுழைந்த ராமசாமி சரவணனை குர்ர்.. எனப் பார்த்தபடியே இருந்தார்.

என்னப்பா இப்படி பாக்குற?

“ஒன்னுல்ல”

“இல்லையே நீ என்னைய என்னமோ மாதிரி பாத்தியே’’

“அட சும்மா இருடா. பெத்த தகப்பன் பாத்தா தப்பா என்ன?

ரெண்டு பேும் என்னமோ செய்றீங்கன்னு மட்டும் எனக்கு தெரியுது. ஆனா என்னென்னு தான் புரிய மாட்டேங்குது.

“ஆமா இவரு பெரிய சமீன்தாரு . இவரப் பாத்து எங்களுக்கு வந்த நெறயப்போகுது என்ற அம்மா தனம் படீரென்று வீட்டிற்குள் சென்று விட்டாள்.

“ஏய் தனம்”

“ம்”

“நாளைக்கு ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போனணுமில்ல. ஆமா ஊரெல்லாம் கல்யாணம் காட்சி அப்படி இப்படின்னு நடந்திட்டு தான் இருக்கு . இங்க தான எதுவும் நடக்க மாட்டேங்குதே. ஒரே ஒரு பய நம்மள இப்படி வெண்ணலையா விட்டுட்டு போயிருவானோன்னு பயமா இருக்கு என்று புலம்பிய தாய் தகப்பனை ஒரு மாதிரியாகப் பார்த்தான் சரவணன்.

அந்த இரவு சரவனுக்குள் ஏதோ செய்தது.

மறுநாள் காலை ராமநாமி தனம் சரவணன் மூவரும் பஸ்ஸில் ஏறி திருமண ஊருக்குப் புறப்பட்டார்கள். அது அவ்வளவாக கூட்டம் இல்லாத அரசுப் பேருந்து. மூவருக்கும் உட்கார இடம் கிடைத்து குண்டும் குழியுமான தார்ச்சாலையில் உருண்டு சென்று கொண்டிருந்தது பேருந்து.

தம்பி தம்பி என்று பின்னாலிருந்த இருக்கையிலிருந்து சத்தம் கேட்டது.சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினான் சரவணன்.

இந்தக் கொழந்தைய அப்பிடியே முன்னாடி சீட்டுல இருக்கிற பொண்ணுகிட்ட கொடுங்க என்று வயதான பெண்மணி கொழுகொழு என்று இருந்த குழந்தையைத் தூக்கி சரவணனின் கையில் கொடுத்தார்.

உட்காரபடியே அந்தக் குழந்தையை வாங்கிய சரவணணுக்குள் குழந்தையின் ஸ்பரிசம் என்னவோ செய்தது.இது என்ன சதைத் தயிர்மாதிரி இருக்கு. இந்த குழந்தையோட உடம்பு யப்பப்பா இது தான் இறைவன் படைப்போ ? ஒவ்வொரு மனிதனும் இப்படி பெறந்து தான் பெருசாகுறான் .அப்படின்னா நாமளும் அப்படித் தான் பொறந்திருப்போம் போல. நமக்கும் இப்படி ஒருகொழந்த இருந்தா எப்படி இருக்கும் என கனவுலகில் சஞ்சரித்து கற்பனைச் சிறகுகளை வானில் பறக்க விட்டு குழந்தையை அப்படியே படித்தபடியே இருந்தான்.

“ஹலோ ஹலோ என்று அழகான பெண் சரவணனைக் கூப்பிட விசுக்கெனத் திரும்பினான்

சரவணன் .கொழந்தையைக் குடுங்க இப்படி தூக்கி வச்சிட்டே கனவு கண்டுட்டு இருக்கீங்க என்று அழகான குரலில் அரற்றினான் .

அந்தப் பெண் குழந்தை தன்னை அரற்றும் அழகான பெண் என சரவணனுக்குள் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது.

அவனுக்குள் ஆயிரங்காலத்துப் பயிர் முளை விட ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *