சென்னை, செப். 22–
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடியை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39) மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.அதில், ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் சிலரை போலீ ஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
வெடிகுண்டு சப்ளை செய்தவர்: இவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை செய்தவர் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட புதூர் அப்புவை இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்த இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூருவில் தனிப்படை போலீஸார் கைது செய்த நிலையில், அவரிடம் புதூர் அப்பு குறித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.