சென்னை, ஆக. 9-
கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட இதுவரை 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க.,காங்கிரஸ்., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொலைக்கான காரணம், மூளையாக செயல்பட்டவர்களின் பின்னணி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதைக் கண்டறியும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை ஒருவர் பின் ஒருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மர்ம நபர் ஒருவர் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பள்ளியில் பணிபுரிந்த வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவர் பெயரில் இந்த மிரட்டலை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தாளாளர் அருண்ராஜ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஓட்டுநர் சதீஷ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சதீஷை பழிவாங்க அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அருண்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தது அம்பலமாகியுள்ளது.