செய்திகள் முழு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Makkal Kural Official

சென்னை, செப். 23

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் 25 பேர்

இது ஒருபுறமிருக்க, கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் தலைமறைவு

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வந்தனர். வழக்கு ஒன்றில் அவர் ஆஜர் ஆகாததால், செங்கல்பட்டு கோர்ட் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், ரவுடி சீசிங்ராஜா குறித்து தகவல் தெரிவிக்குமாறு தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. மேலும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தென் சென்னையை கலக்கி வந்த ரவுடி சி.டி.மணி கைது செய்யப்பட்ட நிலையில், ஆந்­திரா அன்னமயா மாவட்­டம், ராஜம்­பேட்­டையில் உள்ள ஒரு ஓட்­டலில் மனைவிக்கு உணவு வாங்க வரும் போது அங்கு மாறு­வே­டத்தில் தங்­கி­யி­ருந்த போலீசார் சீசிங்­ரா­ஜாவை சுற்­றி­வ­ளைத்து கைது செய்­தனர். கடந்த 2 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சீசிங் ராஜா பெண் வழக்­க­றிஞர் ஒரு­வரை காத­­லித்து திரு­மணம் செய்தார். கடந்த 40 நாட்­க­ளுக்கு முன்­புதான் அவ­ரது மனை­விக்கு குழந்தை பிறந்­துள்­ளது. ஆர்ம்ஸ்­ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தன்னை தேடு­வதால் சீசிங் ராஜா ஆந்­தி­ராவில் தலை­ம­றை­வாக இருந்­துள்ளார்.

டிபன் வாங்க வந்தபோது…

ராஜம்­பேட்­டையில் மனை­வி­­யுடன் தங்­கி­­யி­ருந்த ராஜா அங்­குள்ள ஒரு ஓட்­டலில் டிபன் வாங்க வரு­வது வழக்கம். அதனை மோப்பம் பிடித்த போலீசார் அங்கு அறை எடுத்து தங்­கி­யி­ருந்­துள்­ளனர். நேற்று காலை டிபன் வாங்க வந்த சீசி­ங் ராஜாவை தனிப்­படை போலீசார் ஆந்­திர போலீ­ஸ் உத­வி­யுடன் கைது செய்தனர். அவர் இன்று சென்னை நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலீசார் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

இதைத் தொடர்ந்து சீசிங் ராஜாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை்ககு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் குவிந்துள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீசிங் ராஜா பெயர்

வந்­தது எப்­ப­டி?

சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன. சென்னை மாடம்­பாக்­கத்தைச் சேர்ந்த சீசிங் ராஜா வங்­கி­களில் லோன் மூலம் வாங்­கப்­படும் வாக­னங்­களில் இஎம்ஐ கட்­டாத பட்­சத்தில் அந்த வாக­னங்­களை வங்­கி­க­ளுக்கு மீட்டு பறிமுதல் செய்து கொடுக்கும் வேலையை செய்து வந்­துள்ளார். அதனால் அவ­ருக்கு சீசிங் ராஜா என்று போலீசார் வர­லாற்றுப் பதி­வேட்டில் குறித்து வைத்­துள்­ள­னர்.

போஸ்டர் ஒட்டி தேடிய

தாம்­பரம் போலீஸ்

ரவு­டிகள் ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து தனி சாம்­ராஜ்யம் நடத்தி வந்­துள்­ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்­ன­தாக சீசிங் ராஜா தலைமறைவான நிலையில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி அவரை போலீசார் தேடி வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு போஸ்டர்கள் தாம்பரம் மாநகர காவல் சார்பில் சேலையூர், தாம்பரம் உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், 2வது ஆளாக இன்று சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங்

கொலைக்கும் தொடர்பு இல்லை

சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளச்சேரி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவான சீசிங் ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இவர்மீது நீதிமன்றத்தால் பிணையில் வெளிவர முடியாத 10க்கும் மேற்பட்ட பிடியாணைகள் நிலுவையில் உள்ளது. இவர் நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் ஆந்திரா மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை நேற்று கைது செய்து இன்று அதிகாலை வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விமலிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்து கை துப்பாக்கிகளை கைப்பற்ற வேண்டி அவர் மறைத்து வைத்திருப்பதாக சொன்ன இடமான அக்கரை பக்கிங்ஹாம் கெனால் பேங்க் ரோட்டிற்கு வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல், அடையார் இன்ஸ்பெக்டர் இளங்கனி மற்றும் போலீசார் அழைத்து சென்றனர்.

இன்ஸ்பெக்டரை

நோக்கி சுட்டான்

சம்பவ இடத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுக்கும்போது சீசிங் ராஜா தப்ப முயற்சி செய்துள்ளார். மேலும் திடீரென இன்ஸ்பெக்டரை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டானது இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. இன்ஸ்பெக்டர் விமல் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சீசிங் ராஜாவை நோக்கி சுட்டார். இதில் அந்த துப்பாக்கி குண்டு சீசிங் ராஜாவின் மார்பில் பட்டது. இதில் மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பிடித்தது ஆம்ஸ்ட்ராங் தனிப்படைதான். இங்குள்ள இன்ஸ்பெக்டர் கூறிய தகவலின் அடிப்படையில் அந்த தனிப்படை பிடித்தது. துப்பாக்கியை காட்டி மிரட்டும் வழக்குகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நாங்கள் விசாரித்த வரை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை. இது முழுக்க முழுக்க தற்காப்புக்காக சுடப்பட்டதில் தான் அவர் உயிரிழந்தார். அவரை பிடித்து சட்டப்படி தண்டனை தர வேண்டும் என்று தான் பிடித்து வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது என்று கூறினர்.

கோவையில் ரவுடி காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அவரையும் காலில் சுட்டு பிடித்திருக்கலாமே என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடம் முழுக்க முழுக்க இருட்டாக உள்ளது. ஒரு சில நிமிடங்களில் அவர் அங்கு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

–––––––––––––––––

வைர­லாகும் சீசிங்­ரா­ஜவின்

மனைவியின் கண்­ணீர் வீடி­யோ

இந்நி­லையில் சீசிங்ராஜா மனைவி தனது கைக்­கு­ழந்­­தை­யுடன் கண்­ணீ­ருடன் பேசிய வீடியோ வைர­லாகி வரு­கி­றது, ‘ஓட்­ட­லில் ­எனக்கு காலை உணவு வாங்­­கு­வ­தற்­காக சென்றவர் வீடு திரும்­ப­வில்லை. அவரை தனிப்­படை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்­று விட்­ட­னர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அவ­ருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஊட­கங்­களும், காவல்­­­து­றையும் தவ­றான தக­வலை பரப்பி விட்­டுள்­ளனர்.

எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. அவர் எவ்வித குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. எங்களுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது. எந்த பிரச்சனையும் வேண்டாம் என தனியாக வாழ்ந்து வருகிறோம். போலீஸ் போலி என்கவுன்ட்டர் செய்வதாக தகவல் வருகிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது தான் எனக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. தமிழக அரசு அவர் உயிருக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்ற வேண்டும். பொய்யான தகவல் கொடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *