செய்திகள்

ஆம்பூர் அருகே இன்று அதிகாலை தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி

அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

ஆம்பூர், ஜூன் 25–

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது. இந்நிலையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரெயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர்.

ரெயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார். அதனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரெயில் சென்றது. மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்விழித்தனர். சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார். பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் வந்தனர். சென்னையிலிருந்து ஜான்சி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட பகுதியில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி அந்த பகுதியில் உள்ள சாலைக்கு சென்று நின்றது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *