ஆமதாபாத், ஜூன் 13–
ஆமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
”கற்பனை செய்ய முடியாத துயரம்” என சமூக வலைதளத்தில் வேதனையை பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. 825 அடி உயரத்தை எட்டியபோது அப்படியே கீழே தாழ்ந்து வந்து, விமான நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள். 7 பேர் போர்ச்சுகல் நாட்டினர். கனடாவை சேர்ந்தவர் ஒருவர்.
மேலும் மருத்துவ உணவு விடுதியில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10க்கு மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்கள் சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெஞ்சைப் பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று ஆமதாபாத்திற்கு வந்தார். விமான நிலையத்தை பார்வையிட்ட மோடி அதிகாரிகளுடன் பேசினார். விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்.
இதன் பின்னர் விமான விபத்து நடத்த இடத்தில் பிரதமர் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்து நிகழ்ந்த இடத்தில் நடந்து வரும் மீட்பு பணிகளையும் பார்வையிட்டார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிர்ஷ்டவசமாக
தப்பிய விஷ்வாஸ்
லண்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் என்பவர் மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சிவில் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது விமான விபத்து எப்படி நடந்தது. நான் எப்படி உயிர் பிழைத்தேன். இதனை என்னால் நம்ப முடியவில்லை. விமானத்தில் பச்சை மற்றும் நீல விளக்குகள் எரிந்தன. உடனே அபாயத்தை உணர்ந்தேன். விமானம் கட்டிடத்தின் மீது மோதியதில் நான் இருந்த பகுதியி்ன் கதவு கீழே விழுந்ததில், நான் தரையில் விழுந்தேன். அப்போது சில பயணிகளின் உடல்கள் எரிந்ததை பார்த்தேன். கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்று தெரிவித்தார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார்.
கற்பனை செய்ய முடியாத துயரம்
விமான விபத்து குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டேன். பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அயராது உழைக்கும் அதிகாரிகள் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. விமான விபத்தில் நாம் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம். இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உயர்நிலை குழுவுடன்
ஆலோசனை
ஆமதாபாத் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன், விமான அமைச்சக அதிகாரிகள், மீட்புப் படை அதிகாரிகள், மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.