செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறைப் பயணம்

Makkal Kural Official

நாக்சாட், அக். 17–

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் முதல் பகுதியாக, கடந்த 13-ந்தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற அல்ஜீரியா – இந்தியா பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘மேக் பார் வேர்ல்டு’ திட்டங்களில் இணைய வருமாறு அல்ஜீரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து, தனது சுற்றுப் பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றடைந்தார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார்.

தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் நாக்சாட்டில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியா மற்றும் மொரிடேனியா இடையே கலாச்சார ரீதியாக நிறைய ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக ஆடையில், அதுவும் குறிப்பாக பெண்களின் ஆடை கலாசாரம் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதேபோல் கூட்டு குடும்பம், முன்னோர்களுக்கு மரியாதை அளித்தல், குடும்ப உறவுகளை மதித்தல் உள்ளிட்ட பண்புகள் இருநாட்டு மக்களிடமும் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி 2024 முதல் 2028 வரையிலான இந்திய கலாச்சார பரிமாற்ற திட்டம், விசா இல்லாத அரசுமுறை, அதிகாரப்பூரவ பயணங்களுக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *